புதன், 10 நவம்பர், 2010

இன்றைய பள்ளிக் கல்வி முறையும் செயல்வழிக்கற்றலின் தேவையும்

 பஞ்சாயத்து அமைப்புகளிடம் கல்வி


1981க்கு முன்புவரை தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் தான் இருந்து வந்தது. 1981க்குப் பின் கல்வித்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் ஒரே ஊரில் குடியிருந்தால்தான் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டுவிட்டது. தொலை தூரங்களிலிருந்து ஆசிரியர்கள் நியமனம் செய்வதால் வரவும் போகவுமான பயண நேரத்தைக் கணக்கிட்டு மணியைப் பார்த்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது.

தனியார் கல்வி நிறுவனங்கள்:

இத்தகைய நிலையில்தான் அரசின் புதிய பொருளாதார தனியார் மயக்கொள்கைகள் நாட்டில் புகுந்து விட்டதாலும் தொடக்கக் கல்வித்துறையால் தரமான, சிறப்பான தேவையான கல்வியை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தோன்றிவிட்டன.

1992 73வது சட்டத் திருத்தம் தமிழகத்தில் நிறைவேறவில்லை

1992ம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள் நிர்வாகம் உள்ளூர் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. பள்ளிகளைக் கண்காணிப்பதற்கு தற்போது உள்ளாட்சிகளுக்கு எந்த அதிகாரமும் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் வழங்கப்படாமல் இருக்கிறது.

முழுமையான பள்ளிச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலம் தனது பஞ்சாயத்து சட்டத்தில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உள்ளூர் ஆரம்பப் பள்ளிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும், பள்ளி முன்பருவக் கல்வி, சத்துணவு, பள்ளிக் கட்டடங்கள் பராமரித்தல் போன்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தொடக்கப்பள்ளிகளைப் பராமரிப்பதும், 14 வயது வரை குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி ஒன்றியங்கள் மேற்கொள்ள சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் பள்ளிச் சேர்க்கை 100%, 300 பேர் மக்கள் தொகை குடியிருப்பிற்கு 1கி.மீ. தூரத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிகள் உள்ளதாகவும் அரசு கூறுகிறது.

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பினபடி தமிழக மக்கள் தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 73% பேர் இதில் கையெழுத்து போட மட்டும் தெரிந்தவரும் அடக்கம். மீதி 27% மக்களுக்குத் கையெழுத்தும் கூட போடத் தெரியாது என்பதுதான் நிலை.

1994 தமிழ்நாடு கட்டாய தொடக்கக் கல்வி சட்டம்

இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கும் உச்சநீதிமன்றம் உன்னிகிருஷ்ணன் மற்றும் மோகன்கிரி வழக்குளில் அளித்த தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது. இது கட்டாயக் கல்வியை 5ம் வகுப்புடன் சுருக்கிவிட்டது. 2002

கல்வி அடிப்படை உரிமை 86வது திருத்தம்

 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை அரசு நிர்ணயித்த வண்ணம் அளிப்பது அரசின் கடமையெனவும் 6 வயதுக்கு முன் உள்ள முன்பருவக் கல்வி அரசின் நெறிக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவு 21 திருத்தப்பட்டு 21ஏ ன் மூலம் அடிப்படை உரிமையாக கல்வி (ஆரம்பக் கல்வி) அறிவிக்கப்பட்டது.

21ஏ ஐ செயல்படுத்த 2003 2005 ம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி மசோதா

21ஏஐ அடிப்படை உரிமையான ஆரம்பக்கல்வியை செயல்படுத்த 2003ம் ஆண்டு மத்திய அரசால் ஒரு வரைவு மசோதா கொண்டுவரப்பட்டு அதில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பலரின் கருத்துக்களைப் பெற்று மாற்றங்களுடன் 2005ம் ஆண்டு திருத்தி வரைவு செய்யப்பட்டு 2008ம் ஆண்டு பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயல்வழிக்கற்றல்

இவ்வளவு வரலாறுகளைக் கொண்ட ஆரம்பக்கல்வி தமிழகத்தில் இன்றும் பரவலாக அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லை. அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது அரிதாய் உள்ளது. பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால் இடையில் நின்று விடுகிறார்கள். அப்படியானால், குழந்தைகளை ஈர்க்கும் பள்ளிகளும் அவர்களைக் கவரும் கற்பித்தல் முறைகளும் அவசியம் வேண்டுமல்லவா? இதற்கிடையில் குழந்தையின் கற்றல்திறன் மிகவும் பின்னடைந்துள்ள ஒரு புள்ளி விபரத்தைப் பார்ப்போம்.

 தமிழகத்தில் 10 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு வெளியே உள்ளனர். 5ம் வகுப்பில் 34.8% குழந்தைகளால் மட்டுமே எளிமையான கதைகளைப் படிக்க முடிகிறது. 16.6% குழந்தைகளால் மட்டுமே ஆங்கிலத்தில் எளிதான வாக்கியங்களைப் படிக்க முடிகிறது. 19.5%குழந்தைகளால் மட்டுமே வகுத்தல் கணக்குகளைப் போட முடிகிறது. (தமிழகக் கல்வி நிலையும் செயல்வழிக் கற்றலும் மலரகம்) இது எதைக் காட்டுகிறது?

1. தமிழகத்தில் ஆரம்பக்கல்வியில் குழந்தைகளின் அடிப்படைத்திறன் வளர்ப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

2. பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்க, பள்ளியின் பாட முறைகளும், கற்றல் முறைகளும், கற்றுக் கொண்டோரின் அணுகு முறைகளும் மாற வேண்டியுள்ளது.

3.குழந்தை திறம்படக் கல்வி கற்பதற்கு குழந்தையை மையமாகக் கொண்ட கற்றல் திறன்கள் அவசியமாக உள்ளது. இரு காதுகளைக் கொண்ட குழந்தைகளுக்கு நாம் செல்வதெல்லாம் ஏறிவிடும் என்ற மனப்போக்கைக் கைவிட்டு குழந்தைகளைப் படைப்பாற்றல் கொண்டவர்களாக, அவர்களின் எண்ணங்களைக் குழுவாக, தனியாக வெளிப்படுத்த வந்துள்ள ஒரு முறைதான் செயல்வழிக் கற்றல் (பு.ய.ஸி.) முறை. இதன் மூலம் (பு.ய.ஸி.) குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்படுகிறது. குழந்தைகள் முகமலர்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். அனைத்துக் குழந்தைகளும் குறிப்பாக, கிராமக் குழந்தைகள் இயல்பாக வளர்கிறார்கள். சாதாரண தாழ்த்தப்பட்ட/ஆதிவாசி/பிற்படுத்தப்பட்ட குடும்பத்தின் குழந்தைகள் சாதாரணமாக சூழலில் வளர்வதால் எதையும் சுற்றிப்பார்க்க, அறிய, ஆராய முயல்வார்கள். இந்த உந்துதல் பள்ளிக்குப் போனவுடன் மாற்றப்படுகிறது. அடக்கம், ஒடுக்கம், அமைதி, கவனி என்று எல்லாமே மேலிருந்து திணிக்கப்படும்போது இத்தனை நாளும் இயல்பாகவே இருந்த ஆர்வம் (அறிய, ஆராய) முடக்கப்படுகிறது. மீ ஏற்றத்தாழ்வு, பயஉணர்ச்சி நீங்கிட செயல்வழிக் கற்றல் கூட்டுச் செயல்பாட்டு கற்கும்முறை வழிவகுக்கிறது.

அறியும் திறன், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளது. இது சிறு வயதிலேயே உணரப்படுகிறது. ஆசிரியர்களின் பொறுமையான செயல்பாடு, விடா முயற்சி அவரவர் தகுதி நிலைக்கேற்ப கற்றுக் கொள்ளலாமென்று குழந்தைகள் ஏற்றுக்கொள்கிற வாய்ப்பு இதில் உள்ளது.

ஏபிஎல்ஐ நடத்தும் முறை, அதாவது பாடங்களை அர்த்தமுள்ள அலகுகளாகப் பிரிப்பது, கோர்வையான மைல்கற்கள், படிக்கட்டுகள், ஒவ்வொரு மைல்கல்லை அடையும்போதும் ஒரு இனிமை ஆகியவை மூளையைப் பயன்படுத்த சிந்திக்க ஒரு சிறந்த பயிற்சியாக உள்ளன.

குழுவாகக் கற்றுக்கொள்வது, சக மாணவர்கள் கற்க உதவுவது, இதில் ஆசிரியர்களும் இணைந்து உற்சாகப்படுத்தும்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது ஒருவர் ஒருவருக்கு உதவுவது மனித இயல்பு. அதுவே வெற்றியின் பாதை. இதனால் சுயநலம் குறைய வாய்ப்புள்ளது.

செயல்வழிக்கற்றலில் வருகைப் பதிவை குழந்தைகளே செய்வது, டிரேய்ஸ் கூடைகளை தானே கொண்டு வருவது முடிந்தவுடன் தானே கொண்டு போய் வைப்பது போன்றவை பொறுப்புணர்ச்சியைத் திடப்படுத்துகிறது.

 குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் சாக்பீஸ், கரும்பலகை, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்தக் கொடுக்கும்போது நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் உற்று நோக்கும் திறன்களையும் வளர்க்கிறது.

படிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் செய்வது, குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு. ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில்லாமல் விளையாட்டுப் பந்தயங்களில் திறமையிருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு நடிப்பு, நடனம் போன்றவற்றில் திறமையிருக்கும். இவையாவற்றையும் சிறுவயதிலிருந்தே வளர்க்க இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. (இசை, கலை, கவிதை போன்றவை சமூகத்தைப் பண்படுத்தும் கருவிகள் என்பது இன்னும் நம்மில் பலபேருக்குப் புரியவில்லை,)

ஆசிரியர்கள் குழுவான குழந்தைகளோடு இணைந்து செயல்படுவதால் பெருந்தன்மையோடு அக்கறையுடன் குழந்தைகளுடன் இணைந்து செயல்படுவதால் குழந்தைகளுக்கு அனைவரும் சமம் என்பது மனதில் புரியும். இந்தப் போக்கு குழந்தைகள் வளர வளர தங்களுக்கு மேல் படித்தவர்களுடன் பழக நேரிடும்போது நாம் தள்ளியே இருக்க வேண்டும் என்ற குணம் மறையும். ஆசிரியர்கள் குழந்தைத் தோழனாக குழந்தைகளுடன் கலந்து இருப்பது போன்றே கல்வித்துறை அதிகாரிகளும் (றீறீபு, புசிநு) இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இந்த கல்வி முறையைப் பார்த்தவுடன் நமக்கும் ஏற்படுகிறது.

இவையல்லாமல் பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள் சந்திப்பு அடிக்கடி நடக்க வேண்டும். அப்போதுதான் சமூக உணர்வு வீட்டிலும் தொடர வாய்ப்பு ஏற்படும். இப்படிப்பட்ட கருத்துக்களை கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வெளிப்படுத்தும் கருத்துக்களில் நியாயமானவை என்றே கருதுகிறோம். அத்துடன் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளான ஆசிரியர் மாணவர் விகிதம், போதுமான கல்வி உபகரணங்கள், முழுமையான பயிற்சி, காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை நிரப்புதல் போன்றவைகளில் அரசு முழுக்கவனம் செலுத்தினால் இந்த முறை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒருசாரார் கோருவது நியாயமில்லை என்பது நமக்குப் புலப்பட்டுவிடும்.

இம்முறையில் பிரம்படி என்பதோ, தண்டனைகள் என்பதோ, பிரம்புடன் கூடிய ஆசிரியர் என்பவரோ இல்லாமல் குழந்தைகள் அச்சமில்லாமல் தோழமையுடன் தங்குவதற்கு (இடைவிலகலின்றி) மிக உதவியாக இருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

 எனவே இன்று உருவாகியுள்ள பள்ளிகளில் தண்டனைகள், வன்முறைகளைத் தடுக்கும் பிரச்சாரம் இத்தகைய ஏபிஎல் முறையைத் தமிழகத்தின் தனியார் அரசு அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தி நல்ல சூழல் உருவாகும்வரை நமது பிரச்சாரம் செய்யப்படுவதற்கான தேவை இருக்கிறது. 

நன்றி - குடிமக்கள் முரசு