வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தேர்தல் சீர்திருத்தங்கள்

இந்தியாவில் நாடாளுமன்றம் முதல் அனைத்து மாநில சட்டப் பேரவை வரையிலான அனைத்து அமைப்புகளுக்கும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்துதல் மற்றும் அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வழிகாட்டுதல், கண்காணித்தல், முறைப்படுத்ததல் போன்ற அதிகாரங்கள் தேர்தல் ஆணையம் எனப்படும் சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரையும், மற்ற தேர்தல் ஆணையர்களையும் இந்தியாவின் குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாகவும், அரசு நிர்வாகத்தின் குறுக்கீடுகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகவும் திகழ்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் என்பது மட்டுமின்றி அரசியல் சட்டத்தின் 324(5) பிரிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நேரடியாக பதவி நீக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்குவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவோ, அதே போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க முடியும். அதேபோல் தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின்றி தேர்தல் ஆணையர்களை பதவி நீக்க முடியாது.


 தேர்தல் நடத்தை விதிகள் & இலவச அறிவிப்புகள்

இந்தியாவில் தேர்தல் நடத்தை விதிகள் 1968ம் ஆண்டில் அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வு நடத்திய பிறகு தேர்தல் ஆணையம் உருவாக்கியது. தேர்தல் பிரச்சாரம் ஆரோக்கியமாக நடைபெறுவதையும், பிரச்சாரத்தின் போது அமைதி மற்றும் ஒழுங்கை கடைபிடிக்கவும் வகை செய்யும் நோக்குடன் தான் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் கட்சிகள், தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு எழாமல் இருப்பதையும், தேர்தலின்போது அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஆட்சியில் இருக்கும் கட்சியும் மற்ற அரசியல் கட்சிகளும் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

தேர்தலுக்கு முந்தைய நாட்களில் வாக்காளர்களை கவரும் வகையில் எதையும் செய்யக்கூடாது.

தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக அரசு எந்திரத்தை ஆளுங்கட்சி தவறாக பயன்படுத்தக் கூடாது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அமைச்சர்களும் மற்ற அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களும் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மானியமோ அல்லது வேறு எந்த நிதி உதவியையுமோ வழங்கக் கூடாது. அதுமட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவரும் மக்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவோ சாலைகள் அமைத்துத் தருவது போன்ற திட்டங்களையோ, தற்காலிக அரசுப்பணிகளில் எவரையும் நியமிப்பதையோ அறிவிக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றமின்றி நிலையாக தொடரும் ஒரு விஷயம் என்னவென்றால் இலவச அறிவிப்புகளை வாக்குறுதியாக வெளியிடுவது தான். இவ்வாறு தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவித்து விட்டு, பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் உண்டா என்பதை உச்சநீதிமன்றம் விரைவில் தீர்மானிக்க உள்ளது. தமிழ்நாட்டில் இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், இலவசத் தொலைக்காட்சிகள் மக்களின் அறிவை வளர்க்கும் ஒர் கருவி, இதை அரசு நிர்வாகத்திற்கு தேவையற்ற செலவு என்று கூறமுடியாது என 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளாகும். தேர்தல் நடைமுறைகளின் போது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை திருத்துவதற்காக அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்படுகின்றன. எனினும் தொடக்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த முயற்சிகள், பிரச்சனையனின் நுனியைக் கூட தொடவில்லை. 1990ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக திரு.தினேஷ்கோஸ்வாமி தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு அதன் பணியை 1990ம் ஆண்டு மே 4ஆம் தேதி முடித்தது. அதன்பின் 1996ம் ஆண்டு ஜுலை 23ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக கட்சிகளிடையே ஏற்றப்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில் 1950 மற்றும் 1951 ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தத் திருத்தங்கள் 1956ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. தினேஷ்கோஸ்வாமி குழுவின் சில பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன. தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்ற போதிலும், நாடாளுமன்றமும் சட்டப் பேரவைகளும் ஜனநாயகத்தின் சிறப்பான கருவிகளாக செயல்படுவதையும், அரசியல் கிரிமினல் மயமாவது உட்பட விரும்பத் தகாத நிகழ்வுகளிலிருந்து அரசியல் வாழ்க்கை மற்றும் நடைமுறையை விடுவிப்பதற்காக இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் முன்வைக்கப்பட்டு, அரசின் கவனம் தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்களின் சில முக்கிய அம்சங்களை இங்கே பார்ப்போம்.

அரசியல் கட்சிகள் வரவு செலவுகளை பராமரிப்பதை கட்டாயமாக்குதலும் அதனை தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம் தணிக்கை செய்தலும்

அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் முறையும், அவ்வாறு திரட்டப்பட்ட நிதி செலவழிக்கப்படும் விதமும் வெளிப்படையானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தங்களின் கணக்குகளை வெளியிட்டு அனைத்துத் தரப்பினரின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இந்த நேரத்திற்கு கணக்கு வழக்குகள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அரசியல் கட்சிகளின் கணக்கு வழக்குகள் வெளியிடப்படுவதை கட்டாயமாக்க வேண்டும். மேலும் அவை தலைமைக்கணக்காயரின் ஒப்புதல் பெற்ற தணிக்கை நிறுவனத்தால் தணிக்கை செய்யப்பட வேண்டும். பின்னர் அந்தக் கணக்கு வழக்குகள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் நன்கொடை தருவதை தடை செய்தல்

 அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது 1969ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தத் தடை 1985ம் ஆண்டில் நீக்கப்பட்டது. இப்போதைய நிலையில் கம்பெனிகள் சட்டத்தின் 239வது பிரிவின் படி அரசியல் கட்சிகளுக்கு சில வகையான நன்கொடை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேலாக செயல்படும் நிறுவனங்கள் அதன் ஒட்டு மொத்த இலாபத்தில் 5% க்கும் மிகாத தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் நன்கொடை தருவதை அடியோடு தடை செய்ய வேண்டும் என்பதே தினேஷ்ஸ்வாமி குழு அறிக்கையில் பரிந்துரையாகும். ஆனால், பெரும் செலவு பிடிக்கும் அரசியல் நடைமுறைக்கு ஏதேனும் ஒரு வழியில் நன்கொடை வர வேண்டும். எனினும் அத்தகைய நன்கொடைகள் நியாயமான அளவில் இருப்பதுடன் அனைத்துப் பரிமாற்றங்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் மற்றும் நீக்குதல் இப்போது உள்ள விதிகளை வலுப்படுத்துதல்

1951ஆம் ஆண்டில் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டத்தின் 29( A) பிரிவின்படி தான் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்டுகின்றன. சங்கங்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டத்தின் 29(A) (5) பிரிவின் படி எளிய உறுதிமொழி பிரகடனம் தாக்கல் செய்து அரசியல் கட்சிகளாக பதிவு செய்துகொள்ளலாம். (இவ்வாறு பதிவு செய்யப்படும் சங்கங்களும் குடிமக்கள் அமைப்புகளும் இந்திய அரசியல் சட்டத்தின் மீதும் சோசலிசம் மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பதுடன் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும்). இத்தகைய எளிய நடைமுறைகளால் சிறிய மற்றும் தேர்தலில் போட்டியிடும் என்னமில்லாத கட்சிகள் காளாண்களைப் போல உருவாகி பரவி வருகின்றன.

தேர்தல் செலவு உச்சவரம்பு சரியாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக அரசியல் கட்சிகள் செய்யும் பிரச்சார செலவுகளும் வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்க வேண்டும்

கன்வர்லால் குப்தா VS அமர்நாத் சாவ்லா வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 77(1) பிரிவின்படி ஒர் அரசியல் கட்சி, அதன் வேட்பாளர்களுக்காக போதுவான கட்சிப் பிரச்சாரம் தவிர வேறு எதற்கேனும் செலவு செய்தால், அவ்வாறு செலவு செய்யும்படி கட்சியை வேட்பாளர் கேட்கப்பட்டதாகவே பொருள். வேட்பாளரின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்யும் செலவுகளுக்கும் இது பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது. இதையடுத்து 77வது பிரிவின் முதலாவது உட்பிரிவில் 1974ம் ஆண்டில் விளக்கம் I சேர்க்கப்பட்டது. அதன் படி அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் நண்பர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் தனிநபர்களின் சார்பிலும் வேட்பாளர்களுக்காக செய்யப்படும் செலவுகள் வேட்பாளரின் செலவாக கருதப்படாது என்று அறிவிக்கப்பட்டது. 1975ம் ஆண்டில் இதே பிரிவில் விளக்கம் 3ல் சேர்க்கப்பட்டது. அதன்படி எந்த வேட்பாளருக்காகவும் அரசு பணியில் உள்ளவர்கள் எவரேனும் செய்து தரும் ஏற்பாடுகள், வசதிகள் அல்லது முகவரது செலவாகக் கருதப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரு திருத்தங்களும் செல்லும் என்று இந்திரா காந்தி VS ராஜ் நாராயணன் வழக்கிலும் (AIR 1975 SC 2299) நல்லத்தம்பிதேரா VS இந்திய அரசு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் B.C. நாராயணசாமி VS C.K.ஜாபர்ஷெரிப் வழக்கிலும் (1994 (SUPP) 3 SCC 1970), காடக் யஷ்வந்த்ராவ் VS பாலசாகிப் விகே பாட்டீல் (1994(1)SCC 682) வழக்கிலும் இந்தத் திருத்தங்களை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள்... ''இப்போது நடைமுறையில் உள்ள சட்டம் யதார்த்த நிலைக்கு ஏற்ற வகையில் இல்லை. தேர்தல் செலவுக்கான உச்சவரம்பு, வேட்பாளர் மற்றும் அவரது முகவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட செலவுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. இதனால் அரசியல் கட்சியோ அல்லது வேறு எவருமோ செய்த செலவுகள் கணக்கில் வராமலேயே போகின்றன. எனவே இந்தச் சட்டத்தின் நோக்கமே மறைமுகமான வழியில் மீறப்படுகிறது. தேர்தல் செலவுக்கான உச்சவரம்பு வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. அர்த்தமுள்ள ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்ட தேர்தல் செலவு விதிகள் யதார்த்தமான முறையில் ஆய்வு செய்யப் படுவதில்லை. வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வசதிக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்ற எண்ணத்தை போக்குவது நாடாளுமன்றத்தின் கடமையாகும். ஒருவேளை அது முடியாவிட்டால், சட்டத்தை ஏமாற்றம் நோக்குடன் மறைமுக வழிகள் கடைபிடிக்கப்படுவதை தடுப்பதற்காக, தேர்தலில் பணபலம் பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்படாமல் இந்த விதியை நீக்கிவிடலாம். இந்த விதி உண்மையை மறைப்பதற்கான அத்தி இலையாக இருக்கக் கூட தகுதியற்றது". என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. இதுபற்றி ஆய்வு செய்த தினேஷ்கோஸ்வாமி குழு, 77வது பிரிவிலிருந்து விளக்கம் 3 நீக்கப்பட்டு, 1974ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்கே அச்சட்டம் கொண்டுசெல்லப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. மேலும் வேட்பாளரின் செலவுகள் கணக்கிடப்படும் காலத்தை வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளிலிருந்து முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை என்று மாற்ற வேண்டுமெனவும் அக்குழு பரிந்துரைத்தது.

அரசியல் கிரிமினல் மயமாதல்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு கூறப்படும் காரணம், சட்டத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோருக்கு சட்டத்தை உருவாக்கும் தகுதி இல்லை என்பதுதான். அரசியலில் கிரிமினல்களை களையெடுப்பது மிகப்பேரிய பணியாகும். சட்டத்தை மிதிப்பவர்கள் சட்டத்தை உருவாக்குபவர்களாக இருக்க முடியாது . 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ள குற்ற வழக்குகளில் குற்றச்சாற்று பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்தே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது

எதிர்மறை வாக்களிப்பு தேர்தலில்

எதிர்மறை வாக்களிக்கும் முறை தேவை என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். இந்த முறை தேர்தலில் போட்டியுடும் எந்த வேட்பாளரையும் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்க முடியும். இப்போதைய முறையில் , தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவரை மிகக் குறைவாக எதிர்க்கிறார்களோ அவர்களுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க முடியும் இல்லாவிட்டால் தேர்தலில் வாக்களிக்காமலேயே இருந்து விட வேண்டியதுதான். தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அரசியல் முழக்கங்கள் காதுகளை அடைப்பது வழக்கம். தேர்தலின்போது பொது மக்கள் முழுமையான ஆதரவில்லாவிட்டாலும் போட்டியிடும் வேட்பாளர்களில் எவர் குறைந்த தீமையுடையவரோ அவருக்கே வாக்களிக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் பொதுமக்கள் கூறும் குறையாகும். இப்போதுள்ள வாக்களிக்கும் முறையில் காணப்படும் மிகப் பெரிய குறை என்னவெனில் இந்த முறையில் ஒரே ஒரு வாக்குமட்டுமே செலுத்தமுடியும் என்பதால் வேட்பாளர்களைப் பற்றிய தங்களின் உணர்வுகளை வாக்காளர்களால் தெரிவிக்க முடிவதில்லை. வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிமறையாகவோ வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்குகளை எண்ணும்போது நேர்மையான வாக்குகளிலிருந்து எதிர்மறை வாக்குகளை கழித்த பிறகு கிடைப்பதுதான் அவர் பெற்ற வாக்குகளாகும். ஒவ்வொரு பதவிக்கு நடைபெறும் தேர்தலிலும் ஒரு வாக்காளர் ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு எதிராகவோ அல்லது இன்னொரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ மட்டுமே வாக்களிக்க முடியும். ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுள்ள நேர்மறை வாக்குகளிலிருந்து எதிர்மறை வாக்குகளை கழித்தால் வரும் வாக்குகளே உண்மையான வாக்குகளாகும். இந்த வகையில் எதிர்மறை வாக்காளர்களை கழித்த பிறகு எவர் அதிக ஆதரவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களே வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும். எதிர்மறை வாக்களிப்பை நடைமுறைப்படுத்துவதால் என்ன மாற்றம் ஏற்படும்? வாக்காளர் ஒருவர் தனது கருத்தை வாக்குமூலம் தெரிவிக்கும் போது அவர் யாரோ X,Y,Z க்கோ அல்லது A,B,Cக்கோ வாக்களிப்பதாக அர்த்தமல்ல. நல்லவர்கள் அரசியலுக்கு தேவையென்று வாக்காளர்கள் வாக்கு மூலம் தெரிவிப்பதாகவே அர்த்தம். மோசமான அரசியலால் வேறுப்படைந்த மக்களுக்கு உள்ள ஒரு வாய்ப்பு அரசியலில் நல்லது செய்வதாகும். ஆனால் அரசியலில் நுழைவதற்குத் தேவையான பணம், நேரம், வலிமை போன்றவை எல்லோருக்கும் இருப்பதில்லை. அப்படியானால் அவர்கள் அனைவரும் அவர்களுக்கு விருப்பமில்லாதவர்களால்தான் ஆளப்பட வேண்டுமா? இதற்கு எதிர்மறை வாக்கு சிறந்தத் தீர்வாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இப்போது இருக்கும் வாய்ப்பு இது மட்டும் தான். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை பதிவு செய்ய வசதியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றுக் கூறி 2004ம் ஆண்டு குடியுரமைக்கான மக்கள் ஒன்றியத்தில் (PUCL) சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 1961ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் 41 (2) மற்றும் (3) 49 0 ஆகியவை வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கும் போதிலும் அவை நடைமுறைபடுத்தப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல என்பதுடன் அரசியல் சட்டத்தில் 19 (1) (ழி) மற்றும் 21 ஆகிய பிரிவுகளுக்கும் உலக நடைமுறைக்கும் எதிரானதாகும். எனவே அரசியல் சட்டத்தின் 324வது பிரிவின்படி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் பதிவு செய்வதற்கான வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

 (தேர்தல் நடத்தை விதிகளில் 49 0 பிரிவின்படி வாக்காளர்கள் எவரேனும் தங்களது வாக்கை பதிவு செய்ய விரும்பவில்லை என்று கூறினால் அதை வாக்குச் சாவடி பதிவேட்டில் 17 (ழி) படிவத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது).

எவருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களின் கருத்தைப் பதிவு செய்வது எண்ணுவது மட்டும் போதாது. எதிர்மறை வாக்குகளின் எண்ணிக்கை 50%க்கு அதிகமாக இருந்தால் அங்கு மறு தேர்தல் நடத்த ஆணையிடப்பட வேண்டும்.

 இப்போதுள்ள தேர்தல் முறையை மாற்றுதல்

இப்போதுள்ள தேர்தல் முறை அதிக வாக்குகள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படும் முறையாகும் இதன்படி தேர்தலில் பதிவான வாக்குகளில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றனவோ அவர்கள் வென்றதாக அறிக்கப்படும். தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வெற்றி பெரும் வேட்பாளர் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருப்பதில்லை என்ற விமர்சனம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. எனவே தேர்தலில் பெரும்பான்மை முறை / பட்டியல்முறை/ கலப்பு முறை ஆகியவற்றில் ஒன்றை பின்பற்ற வேண்டுமென கருத்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மை முறை

வெற்றி பெருவதற்கு 50% அதிக வாக்குகளைப் பெற வேண்டும் ஒருவேளை எவரும் 50% வாக்குகளைப் பெறவில்லை என்றால் முதல் 2 இடங்களைப் பெற்ற வேட்பாளர்களிடையே இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்படும். இதில் 50% அதிகமாக பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்காளாக அறிவிக்கப்படும்.

பட்டியல் முறை
அரசியல் கட்சிகளுக்கு கிடையில்தான் போட்டிகள் நடக்கும். இதில் ஒவ்வொரு கட்சியும் பெரும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அக்கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது அறிவிக்கப்படும். இந்த முறையில் தேர்தல் நடப்பதற்கு முன்பே ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் ஆணையத்திடம் வழங்கப்படவேண்டும். 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்ட ஆணையம் தயாரித்த தேர்தல் சீர்திருத்தம் குறித்த ஆய்வறிக்கையில் இப்போதுள்ள தேர்தல் முறையுடன் கூடுதலாக பட்டியல் முறையையும் சேர்க்கலாம் என கருத்தினை தெரிவித்திருந்தது. இப்போதுள்ள முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது அண்மைக்காலமாக வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் 30 முதல் 35% வாக்குகள் பெற்றவர்கள் வெற்றி பெற்றுவிடுகின்றனர். அப்படியானால் அதைவிட அதிகமான 65 முதல் 70% வரை வாக்குகள் பயனற்று போய் விடுகின்றன. எனவே மக்களவைக்கும் மாநில பேரவைகளுக்கும் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே சிறந்த வழி. ஆனால் இது சாத்திமற்றது. இதை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாது என்பதால் இப்போதுள்ள முறையை தொடரச் செய்து கூடுதலாக 25% மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளை உருவாக்கி அதில் பட்டியல் முறையை நடைமுறைப்படுத்தலாம் என்பதே சட்ட ஆணையத்தின் பரிந்துரையாகும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவம்

இந்தியாவிற்கான அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்ட போது இந்தியாவில் நிலவிய கல்வியறிவின்மையை கருத்தில் கொண்டு இந்த முறை ஒத்து வராது என்று அரசியல் சட்ட மேதைகளே ஒதுக்கிவிட்டனர். மேலும் இந்த முறையில் ஏராளமான கட்சிகளுக்கு மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதால் அரசு நிலைத்தன்னையற்றதாகிவிடும். மக்கள் பிரதிநிதிகளின் தகுதிகள் மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் உறுப்பினர்களாக குறிப்பிட்ட கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இப்பதவிகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோர் குறைந்பட்சம் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மக்களவைகளில் சட்டம் மற்றும் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள கல்வித் தகுதி அவசியம் என்றும், குறிப்பிட்ட அளவு கல்வித் தகுதி இருந்தால் மக்களவையிலும் சட்டப் பேரவைகளிலும், உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் மற்றொரு தரப்பினரோ அரசியல் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள கல்வி முக்கியமல்ல.... படிக்காதவர்கள் கூட அரசியல் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அரசியல் சாசன அவை கூட மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவிக்கு எந்தக் கல்வித் தகுதியும் நிர்ணயிக்கவில்லை.

தேர்தலுக்கு அரசு நிதி உதவி

 நன்மைகள்:
 ஜனநாயக நிர்வாக அமைப்பில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும், ஜனநாயகம் நீடிக்க அரசியல் கட்சிகள் அவசியம் என்பதும் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் ஏற்கப்பட்ட ஒன்றாகும். நாட்டின் நிர்வாகத்தில் குடிமக்கள் பங்கேற்பதற்கான பாலமாக கட்சிகள் விளங்குகின்றன. இத்ததைய முக்கியத்துவமான பணிகளைச் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு பொது நிதியிலிருந்து உதவவேண்டும் என்பது அவசியமாகும். இதன் மூலம் அரசியல் கட்சிகள் தனியார் தொழில் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடையை அதிகம் சார்ந்திருக்க தேவையற்ற நிலை ஏற்படும். இது பொதுநலனுக்கு பெரிதும் உதவுவதுடன் ஊழலை ஒழிக்கவும் வகை செய்யும்.

பாதிப்புகள்:
நீண்ட கால ஜனநாயக நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், டென்மார்க், இஸ்ரேல், நார்வே, ஹாலந்து, இத்தாலி, கனடா, அமெரிக்கா (அதிபர் தேர்தலுக்கு மட்டும்), ஜப்பான், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகளில் தேர்தல் செலவுகளை தேர்தல் செலவுகளை ஒட்டுமொத்தமாகவோ அல்லது ஒரு பகுதியோ அரசே ஏற்றுக்கொள்ளும் நடைமுறை கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. தேர்தல் செலவுகளை அரசே ஏற்கும் முறைக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் காரணங்களுக்காக மக்களை திரட்டி ஏற்படுத்தப்பட்ட சுதந்திரமான அமைப்புகளாகும். அவை, அவற்றின் நிதி விவகாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும். அதுமட்டுமின்றி, இத்தாலி, பின்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் அரசு நிதி உதவி வழங்கப்பட்டுவரும் போதிலும், அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறையவேயில்லை, அரசின் நிதி ஆதாரங்கள் மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமே தவிர, அரசியல் நடத்தும் சிலருக்காக செலவிடப்படக் கூடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் செலவுக்கு அரசே நிதி அளித்தால், அரசியல் கட்சிகளின் பிரச்சார செலவு மேலும் அதிகரித்து தேர்தல் என்பதே அதிகம் செலவாகிவிடும் ஒரு விஷயமாகிவிடும். இது தவிர அரசின் நிதி உதவியை பெறுவதற்க்காக அரசியலில் தீவிரம் காட்டாத அமைப்புகள் கூட அரசியல் கட்சிகளைத் தொடங்கும். இதனால் அரசியல் கட்சிகள் காளான்களைப் போல பெருகிவிடும். தேர்தல் செலவை அரசே ஏற்பது அரசியல் கட்சிகளையோ அவற்றின் தேர்தல் செலவுகளையோ கட்டுக்படுத்தாது. அரசியலையும் சுத்தப்படுத்தாது. மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில் இந்த நிதியுதவித் திட்டம் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். 1998ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி அப்போதைய உள்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் தேர்தல் செலவுகளை அரசுகளே ஏற்பதைக் குறித்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இந்திரஜித் குப்தா தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் பின் வருமாறு : தேர்தல்களில் குறைந்த நிதி வசதி கொண்ட கட்சிகள், அதிக நிதி வசதி கொண்ட கட்சிகளுடன் சமபலத்தில் மோத முடியும் என்பதாலும், தேர்தலில் வெற்றிபெற அனைத்து தரப்புக்கும் நியாயமான வழியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதாலும் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பது முற்றிலும் நியாயமானதுதான். ஆனால் அரசின் தேர்தல் செலவு நிதி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசீய மாநில கட்சிகளுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டும். நாட்டின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளின் நிதிச்சுமையில் ஒரு பகுதியை மட்டும்தான் இப்போதைக்கு அரசு ஏற்றுக்கொள்ளும். பின்னர் படிப்படியாக அரசியல் கட்சிகளின் மற்ற செலவுகளும் அரசால் ஏற்கப்பட்டு, ஒரு காலத்தில் ஒட்டுமொத்த செலவுகளையும் அரசே ஏற்கும். அரசின்நிதியுதவி என்பது அரசியல் கட்சிகளின் செலவுகளை ஏற்பதாக மட்டுமே இருக்க வேண்டும். பணமாக தருவதாக இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் அரசியல் கட்சிகளின் கணக்குகளையும் அவற்றுக்கு தொழில் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகளையும் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகும். 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 77வது பிரிவு 1974ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கே கொண்டு செல்லப்பட வசதியாக அதில் சேர்க்கப்பட்ட முதலாவது, மூன்றாவது திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும். தேர்தல் நடைமுறையில் பணம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான மந்திரக்கோலாக அரசே தேர்தல் செலவை ஏற்கும் திட்டத்தை கருதக் கூடாது. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி கவலைப்படாமல், தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.    -   நன்றி திரு நரேஷ் குப்தா

கருத்துகள் இல்லை: