புதன், 23 ஜூன், 2010

அழிந்து வரும் விவசாயம்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் சார்ந்து வாழும் தொழிலின் வளர்ச்சியை பொருத்தே அமையும். இந்தியாவை பொருத்தமட்டில் பெரும்பான்மையோர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழிலையும் செய்து வாழ்கின்றனர். ஆனால் இன்று விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலைக்கு என்னகாரணம் என்று எண்ணத் தோன்றுகிறது . விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கப்படுவதே இதன் முக்கியக் காரணம் . கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு விதமான பொருளாதாரக் கொள்கைகள், தாராளமயமாக்கல் என்னும் முயற்சி பொருளாதார வளர்ச்சியை வியக்க வைக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது . தொழிற்சாலைகள், கணினிநிறுவனங்கள் மற்றும் கேளிக்கை நிறுவனங்கள் என உருவாகியுள்ளது , இதனால் நாட்டின் வருமானம் அதிகரித்திருக்கிறது ஆனால் இத்தகைய வளர்ச்சி ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைமையை கவலைக்கிடமான சூழலுக்குத் தள்ளி விட்டது என்பது தான் வேதனை . இந்தியாவில் மட்டும் சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் 2001 க்குப் பிறகு வறுமையின் காரணமாக தற்கொலை செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் பிரமிக்க வைக்கும் புள்ளி விவரங்கள் நாடுகளின் வளர்ச்சியை வண்ண விளக்குகளும், பங்குச் சந்தைகளும், மேல் நாட்டு முதலீடுகளும், வண்ணக் கண்ணாடிக் கட்டிடங்களும் என உள்ளன ஆனால் மற்றோர் பக்கம் இதற்கு எதிர் சூழல் நிலவுகிறது இதற்கு காரணம் என்ன? விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கப்படுவதே இதன் முக்கியக் காரணம் என்று (ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் சமூக பொருளாதாரக் குழு) தனது விரிவான ஆய்வின் மூலம் தெரியப்படுத்துகிறது. விவசாயிகளின் நலன்களில் அரசு காட்டிய மெத்தனமும், விவசாயநிலங்களை பாதுகாப்பதில் அரசு முக்கியத்துவம் கொடுக்காததும் தான் வறுமைக்கு காரணம் என மிகத் தெளிவான ஒரு பதிலை இந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது . இந்தியாவில் வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 60% மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவர்களை இத்தனை காலமாக அரசுகள் முழுமையாக கண்டுகொள்ளாததன் விளைவாக ஒட்டுமொத்த சமூகத்தையும் இன்று பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது தெளிவாகியுள்ளது . விவசாய நிலங்கள் பல்வேறு விவசாயம் சாராத திட்டங்களுக்காக அழிக்கப்படுவதால் விவசாயிகள் தங்கள் வாழ்கைக்காக விவசாயத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் நிலவுகிறது. விவசாயிகள் விவசாயத்தினால் தன்னிறைவை எட்ட முடியாத அவலம் உருவாகியிருப்பதும் இன்றைய நிலைமைக்கு முக்கிய காரணமாகும். ஆனால் அனைத்து அரசுகளும் தங்கள் கவனங்களை விவசாயிகள் மீது செலுத்தாமல் நிராகரித்துள்ளது. இந்த நிலைமை மிச்சம் இருக்கும் விவசாய வளர்ச்சியை அழிவுக்குள் தள்ளியிருப்பதுடன், புதிதாக மக்கள் விவசாய வாழ்கைக்குள் நுழைவதையும் நிறுத்தியிருக்கிறது. இதனால் விவசாயிகளிடம் வாழ்வதற்கான நம்பிக்கையின்மை வளர்ந்து கொண்டு இருக்கிறது . விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் போது நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் வறுமை விலகும் என்பதர்க்கு உதாரணமாக பல நாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சீனாவில் 1980 களில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போது வறுமை நிலவரம் பாதியாகக் குறைந்திருக்கிறது. தொடர்ந்து விவசாயிகள் அலட்சியப்படுத்தப்பட்டால் விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குறைவான உற்பத்தி, விவசாயத்திற்கு தேவையான பொருட்களின் விலையேற்றம், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை, சந்தை கொள்முதல் விலை குறைவு. உற்பத்திப் பொருட்களை விற்பதற்குரிய வழிகள் இல்லாமை, காலநிலை மாற்றங்கள் தரும் அழிவுகளுக்கான போதிய பாதுகாப்பின்மை என பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் இன்று தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒன்று மட்டும் உண்மை விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக வறுமையில் வாடுவோர் எண்ணிக்கையும். வறுமையின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை . விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும் போதும். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச வாழ்க்கை உத்தரவாதம் வழங்கப்படும் போதும் மட்டுமே வறுமை சமூகம் நிமிரவும், சமநிலையற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சற்று சமநிலையை அடைய முடியுமே தவிர மற்ற சலுகைகளையோ, இலவச திட்டங்களையோ ஒருபோதும் வறுமையினை ஒழித்துவிட முடியாது. அரசு தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளின் மீதான பார்வையை விவசாயிகளின் மேல் திருப்பும் காலம் வந்துவிட்டது . இந்த சமயத்தில் விழித்துக் கொள்ளவில்லை என்றால் மிகவும் கடுமையான உணவு பஞ்சத்தை சந்திக்க நேரிடும் . விவசாய வளங்களை மேம்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், விவசாயிகளுக்குத் தேவையான போக்குவரத்து, சந்தை போன்ற வசதிகள் செய்து தருவதும், அவர்களுக்கு இழப்பீடு, காப்பீடு என திட்டங்கள் வகுப்பதும் வளமான எதிர்காலத்தின் அவசியமாகும். மனித வளம் என்பதும், பொருளாதார முன்னேற்றம் என்பதும் கணிணியின் குளிரூட்டப்பட்ட அறைகளில் நிர்ணயம் செய்யப்படுவதல்ல. அவையெல்லாம் வெறும் மாயைகளே. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலே ஆட்டம் காணும் நிலைமை தான் அவற்றுக்கு. ஆனால் விவசாயம் அப்படியல்ல. ஒட்டுமொத்த பசுமைப்புரட்சி நிலையான வளத்தை நல்கக் கூடியது. மேல்நாட்டு பொருளாதார சட்ட மாறுதல்களால் அழிக்க முடியாத தன்னிறவை விவசாயம் தரும் என்பதை மீண்டும் ஒரு முறை அரசுகள் உணர வேண்டும். .

கருத்துகள் இல்லை: