செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தமிழகத்தில் விவசாயத்தின் இன்றய நிலை

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே . எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு . இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அவர்களின் பாரம்பரிய தொழிலைச் சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் . அதற்காக மற்ற துறைகள அனைத்தையும் ஒதுக்கி விடக்கூடாது, அது மிகவும் தவறு . ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.

விவசாயத்தின் உற்பத்தி திறன் குறைந்துகொண்டு வருகிறது . உற்பத்தி திறன் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் உள்ளது . விவசாயிகள் பயன்படுத்துகின்ற செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை முற்றிலுமாக மாற்றி விட்டன . இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கும் முறை விவசாயிகளிடம் இல்லை . மற்றொன்று அரசின் அலட்சியம்,விவசாய வளர்ச்சிக்கு உண்மையான, தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டு விட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன . சமீபத்தில் கூட 72000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள் . நல்ல விஷயம்தான் . அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள் . கடன் தள்ளுபடி மற்றும் வட்டி தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்


வேளாண் துறை ஆயிரம் விளக்கங்கள் கூறலாம், பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடலாம் . ஊருக்கு ஊர் வேளாண்துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன என்று கணக்கு காட்டலாம் . மாதிரிப் பண்ணைகள் , இலவச மின்சாரம் மற்றும் விதைகள் , செயல் பயிற்சிகள் எல்லாம் செயல்படுகிறது என்று கூறலாம் . இத்தனை இருந்தும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தீர்வு காண எந்த அரசும் முன்வரவில்லை .

அடிப்படை பிரச்சனை விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது என்பதல்ல . விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்னை . அப்படியே ஆட்கள் கிடைத்தால் , அங்கே போதிய தண்ணீர் வசதி கிடையாது . தடையில்லாத மின்சாரம் கிடையாது . இதெல்லாம் இருந்து பயிரிட்டு, உரமிட்டு, அறுவடைசெய்தால் விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று ஒரு வாசகம் உண்டு. 

விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படாதற்கு காரணம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றம் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டதுதான் எடுத்துக்காட்டாக 1970 ஆம் ஆண்டில் ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய் . அப்போது ஒரு மூட்டை நெல் 35 முதல் 40 ரூபாய் வரை விற்றது கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்சம் ரூபாய். ஆனால் ஒரு மூட்டை நெல்லின் விலை 500 முதல் 600 ரூபாய்தான் .கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று டிராக்டர் வாங்க முடியும், அதாவது நெல்லின் பண்டமாற்று சக்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது 1970 ல் ஒரு மாட்டின் விலை ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய் .அன்று தினக்கூலி வெறும் 2.50 இன்று நூறு ரூபாய். அன்று மண்வெட்டியின் விலை இரண்டு ரூபாய்.இன்று ஒரு மண்வெட்டியின் விலை 110 ரூபாய். அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டை விற்றால் தான் ஒரு சவரன் வாங்கமுடியும். 1975 முதல் 2008 வரை தொழிற்சாலைப் பொருட்களின் விலை 40 முதல் 45 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

சட்டமன்ற.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளமும் பன் மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த 60 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஆறு ஊதிய கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களை பல மடங்கு உயர்த்திக்கொண்டார்கள்.  ஆனால் விவசாய பொருட்களுக்கு 8முதல் 10 மடங்கு வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது

 நம் நாட்டில் விவசாயப் பொருள் சந்தைக்கு வரும் போது விலை மிகவும் குறைந்து விடுகிறது, அறுவடை முடிந்ததும உடனேயே காசாக்கி விடுவோம் என்று ஒவ்வோரு விவசாயியும் நினைப்பதால் தங்கள் விளைபொருளை அனைவரும் விற்க ஆசைப்படுகின்றனர், இவர்களின் நிலைமையை பயன் படுத்தி வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கே அப்பொருளை கேட்கின்றனர், செலவழித்ததை விட குறைவாக கிடைத்தாலும் கையில் காசு வருகிறது என்று விவசாயிகள் விற்று விடுகின்றனர். சில காலம் கழிந்து எல்லாவற்றையும் வாங்கிப் பதுக்கிக் கொண்ட வியாபாரிகள் விலையை உயர்த்தி வெளிசந்தையில் விற்க ஆரம்பிப்பார்கள். வாங்குபவர்களுக்கு அந்த விலையில் வாங்கி கொள்வதைத் தவிர வேறு வழியில்லை . வியாபாரிகளுக்கு மட்டுமே அதிக இலாபம் கிடைக்கிறதே தவிர, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவிதமான பயனும் இல்லை. இதனால் விவசாயிகள் கடனாளியாகி விடுகின்றனர், ஏழை மக்களுக்கும் சரியான விலையில் சாப்பாடு கிடைப்பது இல்லை . சந்தைப் பொருளாதாரம் என்கிற சாக்கில் இடைத்தரகர்கள் கொழிக்கிறார்களே தவிர விவசாயிக்கு மிஞ்சுவதென்னவே வறுமையும் , கடனும்தான் . வெல்லம் திங்குறவன் ஒருவன் விரல் சூப்புறவன் இன்னொருவன் இந்த பழமொழி நம் விவசாயிகளுக்கு மிக பொருத்தமானது, விளைவிப்பவன் ஒருவன் அதனுடைய விலையை நிர்ணயம் செய்பவன் இன்னொருவன், லாபம் பெறுபவன் மற்றொருவன் . விவசாயநிலத்தில் விளையும் பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும் .

 நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது, 1939 ஆம் ஆண்டு அமெரிக்கா அரசு நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டுவந்தது .1.விவசாயிகளுக்கு நிவாரணச் சங்கம். 2, நில நிர்வாகச் சட்டம். 3.விலை நிர்ணைய சட்டம் . 4. விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் , இந்த சட்டங்களின் படி அனைத்து விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை உயர்ந்துள்ளது போல விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது , அந்த விலை பின்பு அதிகம் ஏறவும் இறங்கவும் முடியாத படி உற்பத்தியாளர் சந்தை வாரந்தோறும் அமைக்கப்பட்டது. இதனால் விவசாய பொருட்களின் விலை நிர்ணையம் செய்யப்பட்டது ஆனால் நம் நாட்டில் அவ்வாறு இல்லை . மானியங்கள் அதிகரித்தாலும் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  

 இந்தியாவின் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 16 சதவீகிதத்தில் இருந்து 11 சதவீகிதமாக குறைந்துள்ளது தற்போது நாட்டில் 40 சதவீகிதத்தினர் மட்டுமே விவசாயம் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் சந்ததியினர் வேறு தொழிலுக்கு செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது . இந்த நிலை மாறுவதற்கு, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதற்கு அரசு வழிசெய்தாக வேண்டும் . மத்திய அரசின் சம்பளக் கமிஷன் போல , திட்டக் கமிஷன்போல வேளாண்மைக்கு ஒரு கமிஷன் ஏற்படுத்தி விவசாயிகளின் நலன் பேணப்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் உணவு உற்பத்தி தன்னிறைவு என்பது உறுதி செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: