செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தமிழகத்தில் விவசாயத்தின் இன்றய நிலை

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே . எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு . இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அவர்களின் பாரம்பரிய தொழிலைச் சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் . அதற்காக மற்ற துறைகள அனைத்தையும் ஒதுக்கி விடக்கூடாது, அது மிகவும் தவறு . ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.

விவசாயத்தின் உற்பத்தி திறன் குறைந்துகொண்டு வருகிறது . உற்பத்தி திறன் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் உள்ளது . விவசாயிகள் பயன்படுத்துகின்ற செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை முற்றிலுமாக மாற்றி விட்டன . இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கும் முறை விவசாயிகளிடம் இல்லை . மற்றொன்று அரசின் அலட்சியம்,விவசாய வளர்ச்சிக்கு உண்மையான, தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டு விட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன . சமீபத்தில் கூட 72000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள் . நல்ல விஷயம்தான் . அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள் . கடன் தள்ளுபடி மற்றும் வட்டி தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்


வேளாண் துறை ஆயிரம் விளக்கங்கள் கூறலாம், பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடலாம் . ஊருக்கு ஊர் வேளாண்துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன என்று கணக்கு காட்டலாம் . மாதிரிப் பண்ணைகள் , இலவச மின்சாரம் மற்றும் விதைகள் , செயல் பயிற்சிகள் எல்லாம் செயல்படுகிறது என்று கூறலாம் . இத்தனை இருந்தும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தீர்வு காண எந்த அரசும் முன்வரவில்லை .

அடிப்படை பிரச்சனை விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது என்பதல்ல . விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்னை . அப்படியே ஆட்கள் கிடைத்தால் , அங்கே போதிய தண்ணீர் வசதி கிடையாது . தடையில்லாத மின்சாரம் கிடையாது . இதெல்லாம் இருந்து பயிரிட்டு, உரமிட்டு, அறுவடைசெய்தால் விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று ஒரு வாசகம் உண்டு. 

விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படாதற்கு காரணம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றம் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டதுதான் எடுத்துக்காட்டாக 1970 ஆம் ஆண்டில் ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய் . அப்போது ஒரு மூட்டை நெல் 35 முதல் 40 ரூபாய் வரை விற்றது கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்சம் ரூபாய். ஆனால் ஒரு மூட்டை நெல்லின் விலை 500 முதல் 600 ரூபாய்தான் .கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று டிராக்டர் வாங்க முடியும், அதாவது நெல்லின் பண்டமாற்று சக்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது 1970 ல் ஒரு மாட்டின் விலை ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய் .அன்று தினக்கூலி வெறும் 2.50 இன்று நூறு ரூபாய். அன்று மண்வெட்டியின் விலை இரண்டு ரூபாய்.இன்று ஒரு மண்வெட்டியின் விலை 110 ரூபாய். அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டை விற்றால் தான் ஒரு சவரன் வாங்கமுடியும். 1975 முதல் 2008 வரை தொழிற்சாலைப் பொருட்களின் விலை 40 முதல் 45 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

சட்டமன்ற.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளமும் பன் மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த 60 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஆறு ஊதிய கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களை பல மடங்கு உயர்த்திக்கொண்டார்கள்.  ஆனால் விவசாய பொருட்களுக்கு 8முதல் 10 மடங்கு வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது

 நம் நாட்டில் விவசாயப் பொருள் சந்தைக்கு வரும் போது விலை மிகவும் குறைந்து விடுகிறது, அறுவடை முடிந்ததும உடனேயே காசாக்கி விடுவோம் என்று ஒவ்வோரு விவசாயியும் நினைப்பதால் தங்கள் விளைபொருளை அனைவரும் விற்க ஆசைப்படுகின்றனர், இவர்களின் நிலைமையை பயன் படுத்தி வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கே அப்பொருளை கேட்கின்றனர், செலவழித்ததை விட குறைவாக கிடைத்தாலும் கையில் காசு வருகிறது என்று விவசாயிகள் விற்று விடுகின்றனர். சில காலம் கழிந்து எல்லாவற்றையும் வாங்கிப் பதுக்கிக் கொண்ட வியாபாரிகள் விலையை உயர்த்தி வெளிசந்தையில் விற்க ஆரம்பிப்பார்கள். வாங்குபவர்களுக்கு அந்த விலையில் வாங்கி கொள்வதைத் தவிர வேறு வழியில்லை . வியாபாரிகளுக்கு மட்டுமே அதிக இலாபம் கிடைக்கிறதே தவிர, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவிதமான பயனும் இல்லை. இதனால் விவசாயிகள் கடனாளியாகி விடுகின்றனர், ஏழை மக்களுக்கும் சரியான விலையில் சாப்பாடு கிடைப்பது இல்லை . சந்தைப் பொருளாதாரம் என்கிற சாக்கில் இடைத்தரகர்கள் கொழிக்கிறார்களே தவிர விவசாயிக்கு மிஞ்சுவதென்னவே வறுமையும் , கடனும்தான் . வெல்லம் திங்குறவன் ஒருவன் விரல் சூப்புறவன் இன்னொருவன் இந்த பழமொழி நம் விவசாயிகளுக்கு மிக பொருத்தமானது, விளைவிப்பவன் ஒருவன் அதனுடைய விலையை நிர்ணயம் செய்பவன் இன்னொருவன், லாபம் பெறுபவன் மற்றொருவன் . விவசாயநிலத்தில் விளையும் பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும் .

 நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது, 1939 ஆம் ஆண்டு அமெரிக்கா அரசு நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டுவந்தது .1.விவசாயிகளுக்கு நிவாரணச் சங்கம். 2, நில நிர்வாகச் சட்டம். 3.விலை நிர்ணைய சட்டம் . 4. விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் , இந்த சட்டங்களின் படி அனைத்து விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை உயர்ந்துள்ளது போல விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது , அந்த விலை பின்பு அதிகம் ஏறவும் இறங்கவும் முடியாத படி உற்பத்தியாளர் சந்தை வாரந்தோறும் அமைக்கப்பட்டது. இதனால் விவசாய பொருட்களின் விலை நிர்ணையம் செய்யப்பட்டது ஆனால் நம் நாட்டில் அவ்வாறு இல்லை . மானியங்கள் அதிகரித்தாலும் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  

 இந்தியாவின் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 16 சதவீகிதத்தில் இருந்து 11 சதவீகிதமாக குறைந்துள்ளது தற்போது நாட்டில் 40 சதவீகிதத்தினர் மட்டுமே விவசாயம் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் சந்ததியினர் வேறு தொழிலுக்கு செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது . இந்த நிலை மாறுவதற்கு, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதற்கு அரசு வழிசெய்தாக வேண்டும் . மத்திய அரசின் சம்பளக் கமிஷன் போல , திட்டக் கமிஷன்போல வேளாண்மைக்கு ஒரு கமிஷன் ஏற்படுத்தி விவசாயிகளின் நலன் பேணப்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் உணவு உற்பத்தி தன்னிறைவு என்பது உறுதி செய்யப்படும்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

நமது நாட்டு வேளன்மையின் பரிதாப நிலையும் நாம் செய்ய வேண்டியதும்



இருபது நூற்றாண்டை கடந்து இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் கலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ளோம். உலக வரலாற்றில் விஞ்ஞான வளர்சியின் உச்சகட்டமாக இருபதாம் நூற்றாண்டு எண்ணப்பட்டலும் கூட இதே விஞ்ஞான வளர்சி உயிர்களை அழிக்கும் வளர்சியாகவும் செயல்பட்டுவந்துள்ளது. மிகப்பெரிய சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்கி உள்ளது நிலத்தையும், குடிக்கின்ற நீரையும், சுவாசிக்கின்ற காற்றையும் பாழடித்துள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

கடந்த நூற்றாண்டில் இந்திய வேளண்மைக்கு ஏற்பட்ட சோதனை மிகப் பெரிய சோதனை. வளரும் நாடுகள் யாவும் அடிமை நாடுகளாக இருந்து இராண்டாம் உலகபோருக்கு பின்னர் படிபடியாக விடுதலை பெற்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாய் இருந்த இந்தியாவின் விவாசாயம் சீரழிந்தது. இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு நீர்பாசனதிட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதால் உருவானதுதான் மேட்டூர் அணை , கரிகாலன் கட்டிய கல்லணை பழுது பார்க்கப்பட்டது,கல் அணை கால்வாய் வெட்டப்பட்டது (புது ஆறு), இவ்வாறே பெரியாறு அணைத்திட்டம், பாலாற்று கால்வாய் என்று பலவற்றைக் கூறலாம்.


இதன் முக்கிய நோக்கம் நீர்வரியும் நிலவரியுமாகும். இந்த வரி விதிப்பானது நமது விவசாயத்தை பெருமளவு பாதித்தது என்று கூறலாம் ஏனெனில் பிரிட்டிஷ் அரசுக்கு வரிசெலுத்த முடியாமல் பெரும் நிலங்களில் விவசாயம் செய்த ஜமின் அமைப்புகள் விவசாயம் செய்வதை குறைத்துக் கொண்டன. இதனால் பாதிக்கும் மேற்பட்ட விவசாயநிலங்கள் தரிசாக போடப்பட்டது.இதே போன்று அனேக சிறு விவசாயிகளும் நில வரியும், நீர் வரியும் செலுத்த முடியாமல் தங்கள் தேவைக்கும் மட்டும் விவசாயம் செய்ததால் மேலும் அதிக விவசாய நிலங்கள் தரிசாக மாறிப்போனது. இதனால் ஏரி, குளங்கள் தூர்ந்து போயின இத்தகைய காரணங்களினால் கிரமங்களில் பொதுப்பணிகள் புறக்கணிக்கப்பட்ன.


விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில் நமது அரசாங்கம் தொலைநோக்கு பார்வையில்லாமல் கடைபிடித்து வந்த விவசாயக் கொள்கைகள் நமது பாரம்பரிய விவசாய தொழிநுட்பங்களை அதன் சுவடு தெரியாதபடி அழித்தது மட்டும் இல்லாமல் மேலை நாட்டு விவசாய உத்திகளை நம் விவசாயிகள் மேல் திணித்தார்கள். இதன் பலன் என்ன என்று பார்த்தால் இயற்க்கை வேளாண்மையின் பயிர் சுழற்சி முறையின் தன்மை மாறி நூற்றுகனக்கான ஏக்கர்ளில் ஒரே வகையான பணப்பயிர்களை விளைவிக்கும் புதிய பழக்கம் தோன்றியது; பயறு வகைகளை பயிறுடும் பழக்கத்தில் இருந்து நம் விவசாயிகள் விலகினர்,இந்த பயறு வகைகள் காற்று மான்டலத்தில் உள்ள நைட்டரஜன் சத்தை மண்ணில் பொருத்தும் தன்மை கொண்டவை, பயறு வகைகளை விளைவிக்காததால் மண்ணில் நைட்ரஜன் சத்து குறையத் தொடங்கியது. நமது நட்டின் உள்ளுர் உயிர்ச்சூழல் அமைப்புக்கு ஒத்துவராத தாவரவகைகள் நம் நாட்டில் அறிமுக படுத்தினர்.இதனால் முன்பு இல்லாத நோய்களும் பூச்சிகளும் கூடவே சேர்ந்து அறிமுகமாயின. பூச்சிகளையும்,நோய்களையும் சமாளிக்க செயற்கை உரங்கங்களையும், பூச்சிமருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கினார்கள். நமது மண்ணிற்கு வளம் சேர்த்த பண்டங்களுள் முக்கியமானது எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்குகளும் ஒன்று. எண்ணெய் வித்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் மறைமுகமாக நம் மண்ணிண் வளமும் இங்கிலாந்து போன்ற அயல் நாடுகளுக்கு கடத்தப்பட்டது.

தொழிற்ச்சலைகளின் வரவால் நாம் பாரம்பரிய இந்திய செக்குகள் மறைய தொடங்கின. பாரம்பரிய செக்குகளின் மூலம் எடுக்கப்படும் பிண்ணாக்கு மிகவும் பொடி பொடியாக இருப்பதால் மண் வளத்தை அவை உடனடியாக உயர்த்தின.ஆனால் இயந்திரங்களின் மூலம் எண்ணெய் பிழிந்து எடுக்கப்படும் பிண்ணாக்குகிளில் அத்தகைய தன்மை இல்லை.

நவினமயமாக்கப்ட்ட விவசாயத்தால் நாம் நாட்டின் விலை நிலங்களின் தன்மை மாறியது மட்டும் இல்லாமல் பாரம்பரிய விதைகளையும் தானியங்களையும் அழித்துவிட்டார்கள். சம்பா கிச்சடி, வையக் குண்டான், குதிரைவால், தங்கச்சம்பா, ஆனைக்கொம்பன், செருகமணி, சொர்ணவாரி, டொப்பி, அறுபதாங்குறுவை, வெள்ளைக்கார்,கட்டைச்சாம்பா, பிசானம் மடுமுழுங்கி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, வாடன் சம்பா , குடவாழை, குறுவைக் களையான், குழியடுச்சான், கொட்டாரஞ்சம்பா, இலுப்பைப்பூ சம்பா இது போன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட விதை நெல்வகைகள் நம் விவசாயிகளால் பருவ நிலைக்கு ஏற்றவறு பயிர் செய்யப்பட்டது. அனால் இன்று பத்து வீரிய நெல்ரகங்கல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.


இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியை தாண்டி பெறுகிக் கொண்டே போகிறது. அனைவருக்கும்உணவு அளிக்கவேண்டிய விவசாய துறை நாளுக்குநாள் குறுகிக் கொண்டே போகிறது. முன்பு பெரிய முதலீடு இல்லாமல் விவசாயம் செய்தார்கள் நம் முன்னோர்கள். இன்று பசுமைப் புரட்சியின் தாக்கத்தால் நம் விவசாயிகள் பெரிய அளவு செலவு செய்து செய்ய வேணடிய தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. இதனால் இலாபம் இல்லாமல் செய்யும் தொழிலாகிவிட்ட விவசாயத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் விவசாயிகள் மாற்று தொழிலை நாடியுள்ளனர்.இதானல் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் வாங்கும் சக்தியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.


விவசாயம் என்பது போக்கிடம் இல்லாத முதியவர்களின் தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. இந்த நிலையில் இருந்து மீண்டும் நாம் நமது உழவர்களின் பொது அறிவை பளன்படுத்தி பாரம்பரிய வேளான்முறைகளுக்கு திரும்ப வேண்டியது இன்றைய தேவை . இதை ஊக்குவிக்க நமது அரசு முன்வரும் என்று எதிர்பாப்போம்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தேர்தல் சீர்திருத்தங்கள்

இந்தியாவில் நாடாளுமன்றம் முதல் அனைத்து மாநில சட்டப் பேரவை வரையிலான அனைத்து அமைப்புகளுக்கும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்துதல் மற்றும் அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வழிகாட்டுதல், கண்காணித்தல், முறைப்படுத்ததல் போன்ற அதிகாரங்கள் தேர்தல் ஆணையம் எனப்படும் சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரையும், மற்ற தேர்தல் ஆணையர்களையும் இந்தியாவின் குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாகவும், அரசு நிர்வாகத்தின் குறுக்கீடுகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகவும் திகழ்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் என்பது மட்டுமின்றி அரசியல் சட்டத்தின் 324(5) பிரிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நேரடியாக பதவி நீக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்குவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவோ, அதே போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க முடியும். அதேபோல் தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின்றி தேர்தல் ஆணையர்களை பதவி நீக்க முடியாது.

குமரப்பாவின் ஐவகைப் பொருளாதாரம்

டாக்டர் ஜே.சி குமரப்பா சிறையில் இருந்தபோது நூல் ஒன்று எழுதினார் அகற்கு ‘என்றுமுள்ள பொருளாதாரம்’ என்று பெயரிட்டார். அதற்கு அழிவற்ற பொருளாதாரம், நிலைத்தப் பொருளாதாரம் அல்லது காலத்தை வென்ற பொருளாதாரம் என்றும் அதற்கு பெயர் சூட்டலாம். இந்த நூல் சிறப்பாக என்னென்ன கூறியுள்ளது என்பதைப் பார்ப்போமா?

வாழ்வும் பொருளீட்டலும்
மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். வாழ்க்கையில் அமைதி இல்லையென்றால் நமது வாழ் நாள் எல்லாம் சீரழிய வேண்டி வரும். நாம் வாழ்வதற்கோ பொருளும், அருளும் வேண்டும். எப்படியாவது, ஏனோ தானோவென்று பொருளைச் சம்பாதிக்கலாமா? கூடவே கூடாது. இதற்கும் ஒரு நியதி உண்டு. பிறருக்குத் துன்பந் தராமல் அறவழியில் நாம் பொருள் ஈட்ட வேண்டும். நம்மிடத்தில் உள்ளவற்றைப் பிறருடன் பகிர்ந்து மகிழ வேண்டும். அப்போது நமது அண்டை அயலாரும் நம்முடன் தோழமை உணர்வுடன் பழகுவர். இத்தகைய அன்பு தான் நமக்கு அருளை அருளும். அருள் நிறைந்த பொருளாளர் தான் இம்மை மறுமைப் பயன்களை அனுபவிக்க வல்லவர். இக்கருத்தை வலியுறுத்த வந்த நமது குமரப்பா உலகில் இன்று நடைமுறையில் உள்ள பொருளாதார அமைப்புகளை ஐவகைப் படுத்துகிறார். அவற்றின் தராதரங்களை எளிய முறைகளில் அலசி ஆராய்கிறார். அதற்காக புலி, குரங்கு, குருவி, தேனீ, தாய் என்ற வரிசையில் பொருளாதாரக் கொள்கைகளை அவருக்கே உரிய பாணியில் விளக்குகிறார். இதோ அவை.

புலிப் பொருளாதாரம்

புலி ஒரு வன விலங்கு. அதைச் சுற்றி காட்டில் மான், ஆடு, மாடு, குதிரை போன்ற நூற்றுக் கணக்கான மிருகங்கள் ஓடி ஆடித் திரியும். புலிக்குப் பசி எடுத்தவுடன் உறுமும். சுற்றியுள்ள மிருகங்கள் திடுக்கிட்டு இங்குமங்கும் ஓட ஆரம்பிக்கும். புலி பாய்ந்து அவற்றில் ஒன்றைக் கழுத்தில் கவ்வி தன் குகைக்கு இழுத்துச் சென்று தன் குட்டிகளுடன் அதைக் கிழித்து உண்ணும். அது தன் உணவிற்காக எந்த வித உற்பத்தியும் செய்யவில்லை. மாறாக நினைத்தவுடன் ஓர் உயிரை அழித்து தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. இதைவிடப் பாவகரமான சுரண்டல் உலகில் இருக்க முடியுமா? இதைக் கொலைப் பொருளாதாரம் என்று தாராளமாய்க் கூறலாம் அல்லவா?

நடைமுறைச் சான்றுகள்

கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவ்வழியே போன ஒருவன் அச் சங்கிலியைக் கண்ணுறுகிறான். உடனே இன்றைய பவுன் விலை அவனுக்கு ஞாபகம் வருகிறது. இது 2 பவுன் இருக்கும் அதாவது இன்றைய விலைக்கு ரூ. 7000 ஆகும். இந்த எண்ணத்தால் கவரப்பட்ட அவன் அச்சிறுமியைத் தாஜா பண்ணி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டிச் செல்கிறான். அங்கு சங்கிலியைப் பறிக்க யத்தனிக்கிறான். சிறுமி அலற ஆரம்பிக்கிறாள். அவ்வளவுதான், அவன் அவளுடைய கழுத்தை நெறித்து, சங்கிலியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறான். இவன் செய்ததற்கும் புலி தன் இரையைப் பெற்றதற்கும் வித்தியாசம் உண்டோ? இன்றோ பணக்கார நாடுகள் சில இருக்கின்றன. இவை இயந்திரங்களைக் கொண்டு பெரிய அளவில் உற்பத்தியைப் பெருக்குகின்றன. அதனால் பொருள்கள் குவியத் தொடங்குகின்றன. அவற்றை எப்படியாவது விற்பதற்காக சிறிய நாடுகளை இவை பிடித்து விடுகின்றன. எதிர்த்தால் உலகப் போர் உண்டாகிறது. முழுக்க முழுக்க இம்சையை அடிப்படையாகக் கொண்ட இது புலி பொருளாதாரத்தைத் தவிர வேறு என்ன?

குரங்குப் பொருளாதாரம்

குரங்கு மரத்தில் வாழும் நமது மூதாதையர் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பழனி மலையில் குரங்குகள் அதிகம். ஒரு முருக பக்தர் தனது மனைவி மக்களுடன் அடிவாரத்தில் ஒரு கடையில் தேங்காய், பழம் போன்ற அபிஷேகச் சாமான்களை வாங்கிக் கொண்டு படிகளில் பயபக்தியுடன் ஏறி வருகிறார். திடீரென்று அவருக்கு முன் குதித்து அவர் கையிலிருந்து கூடையைப் பறித்துக் கொண்டு மர உச்சிக்குப் போய் விடுகிறார். இவரோ குய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறார். தனக்குரியதை எடுத்துக் கொண்டு கூடையைத் தள்ளி விடுகிறார் நம் மேதாவி. இச்செயலில் இருந்து நாம் புரிந்து கொள்வதென்ன? குரங்கு தன்னுடைய வயிற்றை நிரப்ப எந்த உற்பத்தி வேலையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக படி ஏறி வந்தவர் எதிர் பாராத வேளையில் தனக்கு வேண்டிய பொருளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு போய்விட்டது. இந்தச் சுரண்டலில் கொலை நடக்கவில்லை. பறிமுதல் மட்டும் நடைபெற்றுள்து. ஆகவே இதை கொள்ளைப் பொருளாதாரம் என்று துணிந்து கூறி விடலாம். உதாரணங்கள்: சிறுமியின் சங்கிலியை எடுத்துக் கொள்ள நினைத்தவன் அவளைக் கொல்லாமல் விட்டு விட்டால் குரங்குப் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கின்றான். இங்கு இம்சை ஓரளவு குறைந்துள்ளது. அவ்வளவுதான். இன்று பெரிய நாடுகள் தங்களுடைய அபரிமிதமான பொருட்களை சிறிய நாடுகளின் மேல் திணிக்கின்றன. உதவி என்ற பெயரில் உதவாக்கரைப் பொருட்களையும் அனுப்பி எடுத்துக் கொள்ள வைக்கின்றன. வேறு வழியின்றி இந் நாடுகள் அவற்றை ஏற்று நட்டத்திற்குள் ஆகின்றன. இந்த இம்சை நமது பொருளாதாரத்தை மட்டும் சீர் குலைக்க வைக்கிறது. உயிர்கட்கு ஆபத்தில்லை. இதைப் போலவே கிராமங்களில் பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டிப் பிழைக்கிறதை நாம் அறிவோம். வீட்டுத் திருடர்களும், ஜேப்படித் திருடர்களும் இப்படித்தான் பிழைத்து வருகிறார்கள்.

குருவிப் பொருளாதாரம்

சிட்டுக் குருவி, மைனா, புறா, கிளி, போன்ற சிறிய பறவைகள் அதிகாலையில் விழித்து, கீச்கீச் சென்று தங்களுக்குள் பேசி விட்டு சூரிய வெளிச்சம் தெரிந்ததும் எங்கோ பறந்து செல்கின்றன. காடுகளிலும், வயல்களிலும் தங்களுடைய ஆகாரத்தைக் கூரிய அலகால் கொத்தி உண்கின்றன. கும்மிருட்டிற்கு முன் தங்களுடைய மரங்களில் மீண்டும் வந்தடைகின்றன. இவை தங்கள் சொந்த உழைப்பால் தங்களுக்குத் தேவையான ஆகாரத்தை தேடிப் பெறுகின்றன. மற்றவர்களைச் சுரண்டுவதில்லை. விவசாயிகள், இலாப நோக்கமில்லாத வியாபாரிகள், தங்கள் கைகளை நம்பி வாழும் கூலி வேலை செய்யும் பெரு மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். இதை தன் முயற்சிப் பொருளாதாரம் என்று கூறலாம் அல்லவா? ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளைத் தங்கள் உழைப்பால் பெற்றுக் கொண்டால் உலகில் சண்டை ஏது? சச்சரவு ஏது?

தேனீப் பொருளாதாரம்

தேனடையைச் சோதித்து பார்த்திருக்கிறீர்களா? அங்கு ஒரே ஒரு ராணி ஈ, அதைக் காப்பற்ற நூற்றுக் கணக்கான சோம்பறி ஈக்கள் எனப்படும் ஆண் ஈக்கள். ஆயிரக் கணக்கான வேலைக்கார ஈக்கள். அலிகளான வேலைக்கார ஈக்கள் ஒவ்வொன்றும் குழுவாகச் சேர்ந்து ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன. ஒரு குழு அடைக்கு காவல் புரிகிறது. ஈ, எறும்பு, பல்லி, ஓணான், கரடி போன்ற எதிரிகளை எதிர்த்து உயிரையும் கொடுக்கத் தயாரகிறது. மற்றொன்று தேனடைக்குள் வெப்பம் தாக்காது தடுக்க சதா விசிறிக் கொண்டிருக்கிறது. பல குழுக்கள் அதிகாலையில் கூட்டை விட்டுச் சென்று, பல மைல்கள் பறந்து போய், எண்ணற்ற பூக்களில் உட்கார்ந்து தேனை உறிஞ்சி, மகரந்தத் தூளைச் சேகரித்து வருகின்றன. சில கண்ணறைகளை மெழுகால் அறுபக்க வடிவில் அழகாய் அமைக்கின்றன. ராணி ஈக்கு தனி அறை, தனி உணவு என்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அடையில் உள்ள அத்தனை ஈக்களும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுவதால் தேன் வம்சம் பெருகுகிறது. தனக்காக மட்டும் உழைக்காமல், சமூகத்திற்காவும் தேனீக்கள் பாடுபடுகின்றன. ஆகவே இதைக் காட்டிலும் கூட்டுறவுப் பொருளாதாரம் உண்டோ? நமது நாட்டில் பஞ்சாயத்து, கிராமசபை, கூட்டுறவு என்ற முறைகளில் நம்மை நாமே உயர்த்திக் கொண்டது இதன் அடிப்படையில் அல்லவா? ஊர்களில் கிராமப் பொது நிதி என்று திரட்டி அதைப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தி வரும் பழக்கத்தை இத்துடன் ஒப்பு நோக்குக. சுருங்கக் கூறின் மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதை இத்திட்டம் நமக்கு வலியுறுத்துகிறது.

தாய்மைப் பொருளாதாரம்

 நமது தாய் ஓர் ஒப்பற்ற தியாகி. நம்மைப் பத்து மாதங்கள் சுமந்து சொல்லொணாப் பிரசவ வேதனையை அனுபவித்து நம்மைப் பெற்றெடுத்தாள். நாம் பால்குடி மறக்கும் வரை அவள் தான் விரும்பிய பொருளை நினைத்த நேரத்தில் உண்ண முடியாதவள். அதையும் விட்டுக் கொடுத்தாள். நமது பாலப் பருவம் முடியும் வரை நம்மைக் கண்ணே போல் பேணிக் காத்தாள். நம்முடைய இன்ப துன்பத்தில் எல்லாம் பங்கு கொண்டாள். பிரதிப் பலனை எதிர் பாராது தன் கடமையை இறுதிவரை ஆற்றிக் கொண்டே உயிர் விடுகிறாள். தனக்கென வாழாமல், குடும்ப நலத்திற்கு தன் இன்னுயிரை அளிக்கிறாள். இத்தகைய அன்பு, கருணை, தியாகம், கடமை உணர்வு கொண்ட சேவைப் பொருளாதாரந்தான் காந்தியப் பொருளாதாரம் என்று அடித்துக் கூறுகிறார் குமரப்பா.

அமைதிப் பொருளாதாரம்:

 நமது கிராமங்களில் தச்சர், கொல்லர், வாணியர், செம்மான் போன்ற பல தரப்பட்ட தொழிலாளிகள் இருந்தனர். இவர்கள் விவாசாயிகளுக்கு வேண்டிய கருவிகளையும், பொருட்களையும் தக்க சமயத்தில் தயார் செய்து கொடுத்தனர். அறுவடைக் காலத்தில் விவசாயிகள் இவர்கட்கு வேண்டிய தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை ஈடாக கொடுத்து வந்தனர். துட்டுச் செலவில்லாமல் இவ்வாறு ஒதுக்கி பண்டமாற்று அடிப்படையில் அனைவரின் தேவைகளும் நிறைவு பெற்றன. இந் நிலை ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப் படுத்தாத காலத்தில் இருந்த நிலை. ஆனால் இன்றோ அவர்களுடைய பணப் பொருளாதாரம் நம்மையும், உலகையும் ஆட்டுவிக்கிறது. ஏழை, பணக்காரர்களிடையே இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள அளவு ஏற்றத் தாழ்வுகளை ஏற்பட வைத்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அமைதி இல்லை. போட்டி, பொறாமை, சுரண்டல், கொலை, களவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த அவல நிலையை மாற்றி அமைக்கவே பரவல் முறையில் காந்தியடிகள் கதர், கிராமத் தொழில்களை ஆதரித்தார். இவற்றைப் பொது மக்கள், முக்கியமாக கிராமவாசிகள் என்று புரிந்து செயல்படுகின்றார்களோ அன்று தான் அமைதிப் பொருளாதாரம் இந்தியாவை நிர்மாணிக்கும். சிந்தியுங்கள். (நன்றி: திரு. கா. முனியாண்டி எழுதிய காந்தியப் பொருளாதாரச் சிற்பி என்ற நூலின் ஒரு பகுதி)