வெள்ளி, 3 செப்டம்பர், 2010

குமரப்பாவின் ஐவகைப் பொருளாதாரம்

டாக்டர் ஜே.சி குமரப்பா சிறையில் இருந்தபோது நூல் ஒன்று எழுதினார் அகற்கு ‘என்றுமுள்ள பொருளாதாரம்’ என்று பெயரிட்டார். அதற்கு அழிவற்ற பொருளாதாரம், நிலைத்தப் பொருளாதாரம் அல்லது காலத்தை வென்ற பொருளாதாரம் என்றும் அதற்கு பெயர் சூட்டலாம். இந்த நூல் சிறப்பாக என்னென்ன கூறியுள்ளது என்பதைப் பார்ப்போமா?

வாழ்வும் பொருளீட்டலும்
மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். வாழ்க்கையில் அமைதி இல்லையென்றால் நமது வாழ் நாள் எல்லாம் சீரழிய வேண்டி வரும். நாம் வாழ்வதற்கோ பொருளும், அருளும் வேண்டும். எப்படியாவது, ஏனோ தானோவென்று பொருளைச் சம்பாதிக்கலாமா? கூடவே கூடாது. இதற்கும் ஒரு நியதி உண்டு. பிறருக்குத் துன்பந் தராமல் அறவழியில் நாம் பொருள் ஈட்ட வேண்டும். நம்மிடத்தில் உள்ளவற்றைப் பிறருடன் பகிர்ந்து மகிழ வேண்டும். அப்போது நமது அண்டை அயலாரும் நம்முடன் தோழமை உணர்வுடன் பழகுவர். இத்தகைய அன்பு தான் நமக்கு அருளை அருளும். அருள் நிறைந்த பொருளாளர் தான் இம்மை மறுமைப் பயன்களை அனுபவிக்க வல்லவர். இக்கருத்தை வலியுறுத்த வந்த நமது குமரப்பா உலகில் இன்று நடைமுறையில் உள்ள பொருளாதார அமைப்புகளை ஐவகைப் படுத்துகிறார். அவற்றின் தராதரங்களை எளிய முறைகளில் அலசி ஆராய்கிறார். அதற்காக புலி, குரங்கு, குருவி, தேனீ, தாய் என்ற வரிசையில் பொருளாதாரக் கொள்கைகளை அவருக்கே உரிய பாணியில் விளக்குகிறார். இதோ அவை.

புலிப் பொருளாதாரம்

புலி ஒரு வன விலங்கு. அதைச் சுற்றி காட்டில் மான், ஆடு, மாடு, குதிரை போன்ற நூற்றுக் கணக்கான மிருகங்கள் ஓடி ஆடித் திரியும். புலிக்குப் பசி எடுத்தவுடன் உறுமும். சுற்றியுள்ள மிருகங்கள் திடுக்கிட்டு இங்குமங்கும் ஓட ஆரம்பிக்கும். புலி பாய்ந்து அவற்றில் ஒன்றைக் கழுத்தில் கவ்வி தன் குகைக்கு இழுத்துச் சென்று தன் குட்டிகளுடன் அதைக் கிழித்து உண்ணும். அது தன் உணவிற்காக எந்த வித உற்பத்தியும் செய்யவில்லை. மாறாக நினைத்தவுடன் ஓர் உயிரை அழித்து தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. இதைவிடப் பாவகரமான சுரண்டல் உலகில் இருக்க முடியுமா? இதைக் கொலைப் பொருளாதாரம் என்று தாராளமாய்க் கூறலாம் அல்லவா?

நடைமுறைச் சான்றுகள்

கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவ்வழியே போன ஒருவன் அச் சங்கிலியைக் கண்ணுறுகிறான். உடனே இன்றைய பவுன் விலை அவனுக்கு ஞாபகம் வருகிறது. இது 2 பவுன் இருக்கும் அதாவது இன்றைய விலைக்கு ரூ. 7000 ஆகும். இந்த எண்ணத்தால் கவரப்பட்ட அவன் அச்சிறுமியைத் தாஜா பண்ணி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டிச் செல்கிறான். அங்கு சங்கிலியைப் பறிக்க யத்தனிக்கிறான். சிறுமி அலற ஆரம்பிக்கிறாள். அவ்வளவுதான், அவன் அவளுடைய கழுத்தை நெறித்து, சங்கிலியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறான். இவன் செய்ததற்கும் புலி தன் இரையைப் பெற்றதற்கும் வித்தியாசம் உண்டோ? இன்றோ பணக்கார நாடுகள் சில இருக்கின்றன. இவை இயந்திரங்களைக் கொண்டு பெரிய அளவில் உற்பத்தியைப் பெருக்குகின்றன. அதனால் பொருள்கள் குவியத் தொடங்குகின்றன. அவற்றை எப்படியாவது விற்பதற்காக சிறிய நாடுகளை இவை பிடித்து விடுகின்றன. எதிர்த்தால் உலகப் போர் உண்டாகிறது. முழுக்க முழுக்க இம்சையை அடிப்படையாகக் கொண்ட இது புலி பொருளாதாரத்தைத் தவிர வேறு என்ன?

குரங்குப் பொருளாதாரம்

குரங்கு மரத்தில் வாழும் நமது மூதாதையர் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பழனி மலையில் குரங்குகள் அதிகம். ஒரு முருக பக்தர் தனது மனைவி மக்களுடன் அடிவாரத்தில் ஒரு கடையில் தேங்காய், பழம் போன்ற அபிஷேகச் சாமான்களை வாங்கிக் கொண்டு படிகளில் பயபக்தியுடன் ஏறி வருகிறார். திடீரென்று அவருக்கு முன் குதித்து அவர் கையிலிருந்து கூடையைப் பறித்துக் கொண்டு மர உச்சிக்குப் போய் விடுகிறார். இவரோ குய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறார். தனக்குரியதை எடுத்துக் கொண்டு கூடையைத் தள்ளி விடுகிறார் நம் மேதாவி. இச்செயலில் இருந்து நாம் புரிந்து கொள்வதென்ன? குரங்கு தன்னுடைய வயிற்றை நிரப்ப எந்த உற்பத்தி வேலையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக படி ஏறி வந்தவர் எதிர் பாராத வேளையில் தனக்கு வேண்டிய பொருளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு போய்விட்டது. இந்தச் சுரண்டலில் கொலை நடக்கவில்லை. பறிமுதல் மட்டும் நடைபெற்றுள்து. ஆகவே இதை கொள்ளைப் பொருளாதாரம் என்று துணிந்து கூறி விடலாம். உதாரணங்கள்: சிறுமியின் சங்கிலியை எடுத்துக் கொள்ள நினைத்தவன் அவளைக் கொல்லாமல் விட்டு விட்டால் குரங்குப் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கின்றான். இங்கு இம்சை ஓரளவு குறைந்துள்ளது. அவ்வளவுதான். இன்று பெரிய நாடுகள் தங்களுடைய அபரிமிதமான பொருட்களை சிறிய நாடுகளின் மேல் திணிக்கின்றன. உதவி என்ற பெயரில் உதவாக்கரைப் பொருட்களையும் அனுப்பி எடுத்துக் கொள்ள வைக்கின்றன. வேறு வழியின்றி இந் நாடுகள் அவற்றை ஏற்று நட்டத்திற்குள் ஆகின்றன. இந்த இம்சை நமது பொருளாதாரத்தை மட்டும் சீர் குலைக்க வைக்கிறது. உயிர்கட்கு ஆபத்தில்லை. இதைப் போலவே கிராமங்களில் பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டிப் பிழைக்கிறதை நாம் அறிவோம். வீட்டுத் திருடர்களும், ஜேப்படித் திருடர்களும் இப்படித்தான் பிழைத்து வருகிறார்கள்.

குருவிப் பொருளாதாரம்

சிட்டுக் குருவி, மைனா, புறா, கிளி, போன்ற சிறிய பறவைகள் அதிகாலையில் விழித்து, கீச்கீச் சென்று தங்களுக்குள் பேசி விட்டு சூரிய வெளிச்சம் தெரிந்ததும் எங்கோ பறந்து செல்கின்றன. காடுகளிலும், வயல்களிலும் தங்களுடைய ஆகாரத்தைக் கூரிய அலகால் கொத்தி உண்கின்றன. கும்மிருட்டிற்கு முன் தங்களுடைய மரங்களில் மீண்டும் வந்தடைகின்றன. இவை தங்கள் சொந்த உழைப்பால் தங்களுக்குத் தேவையான ஆகாரத்தை தேடிப் பெறுகின்றன. மற்றவர்களைச் சுரண்டுவதில்லை. விவசாயிகள், இலாப நோக்கமில்லாத வியாபாரிகள், தங்கள் கைகளை நம்பி வாழும் கூலி வேலை செய்யும் பெரு மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். இதை தன் முயற்சிப் பொருளாதாரம் என்று கூறலாம் அல்லவா? ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளைத் தங்கள் உழைப்பால் பெற்றுக் கொண்டால் உலகில் சண்டை ஏது? சச்சரவு ஏது?

தேனீப் பொருளாதாரம்

தேனடையைச் சோதித்து பார்த்திருக்கிறீர்களா? அங்கு ஒரே ஒரு ராணி ஈ, அதைக் காப்பற்ற நூற்றுக் கணக்கான சோம்பறி ஈக்கள் எனப்படும் ஆண் ஈக்கள். ஆயிரக் கணக்கான வேலைக்கார ஈக்கள். அலிகளான வேலைக்கார ஈக்கள் ஒவ்வொன்றும் குழுவாகச் சேர்ந்து ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன. ஒரு குழு அடைக்கு காவல் புரிகிறது. ஈ, எறும்பு, பல்லி, ஓணான், கரடி போன்ற எதிரிகளை எதிர்த்து உயிரையும் கொடுக்கத் தயாரகிறது. மற்றொன்று தேனடைக்குள் வெப்பம் தாக்காது தடுக்க சதா விசிறிக் கொண்டிருக்கிறது. பல குழுக்கள் அதிகாலையில் கூட்டை விட்டுச் சென்று, பல மைல்கள் பறந்து போய், எண்ணற்ற பூக்களில் உட்கார்ந்து தேனை உறிஞ்சி, மகரந்தத் தூளைச் சேகரித்து வருகின்றன. சில கண்ணறைகளை மெழுகால் அறுபக்க வடிவில் அழகாய் அமைக்கின்றன. ராணி ஈக்கு தனி அறை, தனி உணவு என்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அடையில் உள்ள அத்தனை ஈக்களும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுவதால் தேன் வம்சம் பெருகுகிறது. தனக்காக மட்டும் உழைக்காமல், சமூகத்திற்காவும் தேனீக்கள் பாடுபடுகின்றன. ஆகவே இதைக் காட்டிலும் கூட்டுறவுப் பொருளாதாரம் உண்டோ? நமது நாட்டில் பஞ்சாயத்து, கிராமசபை, கூட்டுறவு என்ற முறைகளில் நம்மை நாமே உயர்த்திக் கொண்டது இதன் அடிப்படையில் அல்லவா? ஊர்களில் கிராமப் பொது நிதி என்று திரட்டி அதைப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தி வரும் பழக்கத்தை இத்துடன் ஒப்பு நோக்குக. சுருங்கக் கூறின் மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதை இத்திட்டம் நமக்கு வலியுறுத்துகிறது.

தாய்மைப் பொருளாதாரம்

 நமது தாய் ஓர் ஒப்பற்ற தியாகி. நம்மைப் பத்து மாதங்கள் சுமந்து சொல்லொணாப் பிரசவ வேதனையை அனுபவித்து நம்மைப் பெற்றெடுத்தாள். நாம் பால்குடி மறக்கும் வரை அவள் தான் விரும்பிய பொருளை நினைத்த நேரத்தில் உண்ண முடியாதவள். அதையும் விட்டுக் கொடுத்தாள். நமது பாலப் பருவம் முடியும் வரை நம்மைக் கண்ணே போல் பேணிக் காத்தாள். நம்முடைய இன்ப துன்பத்தில் எல்லாம் பங்கு கொண்டாள். பிரதிப் பலனை எதிர் பாராது தன் கடமையை இறுதிவரை ஆற்றிக் கொண்டே உயிர் விடுகிறாள். தனக்கென வாழாமல், குடும்ப நலத்திற்கு தன் இன்னுயிரை அளிக்கிறாள். இத்தகைய அன்பு, கருணை, தியாகம், கடமை உணர்வு கொண்ட சேவைப் பொருளாதாரந்தான் காந்தியப் பொருளாதாரம் என்று அடித்துக் கூறுகிறார் குமரப்பா.

அமைதிப் பொருளாதாரம்:

 நமது கிராமங்களில் தச்சர், கொல்லர், வாணியர், செம்மான் போன்ற பல தரப்பட்ட தொழிலாளிகள் இருந்தனர். இவர்கள் விவாசாயிகளுக்கு வேண்டிய கருவிகளையும், பொருட்களையும் தக்க சமயத்தில் தயார் செய்து கொடுத்தனர். அறுவடைக் காலத்தில் விவசாயிகள் இவர்கட்கு வேண்டிய தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை ஈடாக கொடுத்து வந்தனர். துட்டுச் செலவில்லாமல் இவ்வாறு ஒதுக்கி பண்டமாற்று அடிப்படையில் அனைவரின் தேவைகளும் நிறைவு பெற்றன. இந் நிலை ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப் படுத்தாத காலத்தில் இருந்த நிலை. ஆனால் இன்றோ அவர்களுடைய பணப் பொருளாதாரம் நம்மையும், உலகையும் ஆட்டுவிக்கிறது. ஏழை, பணக்காரர்களிடையே இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள அளவு ஏற்றத் தாழ்வுகளை ஏற்பட வைத்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அமைதி இல்லை. போட்டி, பொறாமை, சுரண்டல், கொலை, களவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த அவல நிலையை மாற்றி அமைக்கவே பரவல் முறையில் காந்தியடிகள் கதர், கிராமத் தொழில்களை ஆதரித்தார். இவற்றைப் பொது மக்கள், முக்கியமாக கிராமவாசிகள் என்று புரிந்து செயல்படுகின்றார்களோ அன்று தான் அமைதிப் பொருளாதாரம் இந்தியாவை நிர்மாணிக்கும். சிந்தியுங்கள். (நன்றி: திரு. கா. முனியாண்டி எழுதிய காந்தியப் பொருளாதாரச் சிற்பி என்ற நூலின் ஒரு பகுதி)

கருத்துகள் இல்லை: