புதன், 15 பிப்ரவரி, 2012

சில்லறை வணிகத்தில் அந்நி முதலீடு! விவசாயிகளை வாழ வைக்குமா?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும் மசோதாவொன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. பெருவாரியான மக்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்னிய முதலீடுகளை சிறுவணிகத்தில் அனுமதிக்கும் போது கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. 

* சிறுவணிகத்தின் வளர்ச்சி 13 சதவீதம் உயரும்.

* சர்வதேச உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப் பொருள்கள் விற்க முடியாமல் வீணாகிறது. எனவே உணவு பொருள் வீணாகுவதை தவிர்க்கலாம்

. * விவசாயிகள் நன்மை பெறுவார்கள் அதே வேலையில் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும்.

 * விலைவாசி குறையும்.

 உடலில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத எவரேனும் இருந்தால் என்னோடு வாருங்கள். ஐரோப்பிய ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அழித்து விட வேண்டும்." என்று 1801 அன்று வணிகம் செய்ய வந்து நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு அடியோடு விரட்ட மக்களை அறைகூவல் விடுத்தார் சின்ன மருது. 

இன்று இந்திய அரசு அன்னியர்களை பட்டு கம்பலம் விரித்துக்கொண்டு அழைக்கிறது,. அன்னியர்களே வாருங்கள் வாருங்கள் வந்து விரும்பிய வண்ணம் வாணிபம் செய்யுங்கள் செய்யுங்கள் " என்று அன்னியர்களை அறைகூவல் இட்டு அழைக்கிறது மத்திய அரசு. 

சிறுவணிகத்தின் வளர்ச்சி 13 சதவீதம் உயரும்!"

இவர்கள் நன்மை என்று எதை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. சில்லறை வணிகம் என்பது என்ன? என்றே இவர்களுக்கு தெரியவில்லை. கிராமங்களில் வடை சுட்டு விற்கும் பாட்டி, கடை கடையா ஏறி கடலை மிட்டாய் போடும் தாத்தா, முதல் நகரத்தில் பலசரக்கு கடை நடத்துபவர்கள் வரை அனைவரும் சிறு வியாபாரிகள் அல்லது சிறு வணிகர்கள்தான். இவர்கள் குறைந்த அளவு முதலீடு போட்டு அதிக உடல் உழைப்புடன் செய்யும் வணிகம் தான் சிறு வணிகம். இந்த வணிகத்தில் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தால் அந்த வணிகம் எப்படி சிறுவணிகமாக இருக்க முடியும். மிகப்பெரிய வணிகமாக அல்லவா மாறிவிடும். அன்னிய முதலீட்டுக்கு பின் இல்லாத ஒரு வணிகம் எப்படி 13 சதவீத வளர்சி அடையும். மிகப்பெரிய பொருளதார மேதைகளுக்கு இந்த சிறு வணிக பொருளாதாரம் பற்றி அறியாமல் போய்விட்டதோ என்று என்ன தோன்றுகிறது. 

சர்வதேச உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப் பொருள்கள் விற்கமுடியாமல் வீணாகிறது. எனவே உணவு பொருள் வீணாகுவதை தவிர்க்கலாம்" இது தான் உண்மையா? 

பொருள் வீணாகிறது என்று அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது. உலகில் எந்த அரசும் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு இந்த மாதரி ஒரு காரணத்தை கூறாது. டிசம்பர் 19 , 2011 அன்று டில்யில் மத்திய அரசின் இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கிடங்கிகளில் இருந்து 2010-11 ஆண்டில் ஒரு லட்சத்து 56 டன் தானியங்களும், 2009-10 ஆண்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் டன் தானியங்களும், 2008-09 ஆண்டில் 58 ஆயிரம் டன் தானியங்களும் சேதமடைந்துள்ளதாக மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கே.வி. தாமஸ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்." இந்திய விவசாயிகள் அரும்பாடுப்பட்டு விளைவிக்கும் உணவு தானியங்களை அரசின் அறிவின்மையால் வீணாக்கிவிட்டு, அன்னிய முதலீடுகளை அனுமதித்தால் சரியாகிவிடும் என்று சப்பை கட்டு கட்டுவது சரியல்ல.


 விவசாயிகள் நன்மை அடைவார்களா? 

 சிறு வணிகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதித்தால் முதலீடு செய்யப் போவது குப்பனும், சுப்பனும் அல்ல. வால்மார்ட் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தான் முதலீடு செய்வார்கள். இது போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகைக்கு பின்னால் தான் இந்திய விவசாயம் அழிவுப் பாதையை நோக்கி தள்ளப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

 பசுமைப் புரட்சிக்குப் பின் பாரம்பரிய மரபுசார் விதை ரகங்கள் அழிந்து போய் தற்போது விதைக்கும் கூட பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து செய்யப்பட்டு அவை உர முதலாளிகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறிக்கொள்ளும் பொருளாதார வல்லுநர்கள், விவசாயம் 0.5 சதவீதமாக தேய்ந்து வருவதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. 1980 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36.4 சதவீதமாக இருந்த விவசாயம், 2008-ம் ஆண்டுக்குப் பின் 17 சதவீதமாக வீழ்ந்துள்ளது. 

தொண்ணூறுகளின் துவக்கத்தில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசு விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் மானியத்தை குறைக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. உள்நாட்டு விவசாயத்தை அழித்து நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழித்துக் கட்டுவதன் மூலம், இந்த சந்தையை பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் சிக்க வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும். 

விவசாயத்தை அரசின் பொறுப்பில் இருந்து கைகழுவி அதை அந்நிய தொழிற் நிறுவனங்களுக்கு முழுமையாக தாரைவார்த்து கொடுக்கும் நோக்கம் தான் அன்னிய நாட்டு முதலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பது. இந்த செயல் எப்படி விவசாயத்தை வளரச்செய்யும் என்று தெரியவில்ைலை. அழிவின் உச்சியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இந்த அன்னிய நாட்டு முதலீடு எப்படி காப்பாற்றும் என்று நம்புகிறார்கள் என்றும் தெரியவில்லை. அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளையும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்டு கடனாளியாகித் தற்கொலை செய்துகொண்ட மராத்திய விவசாயிகளையும் மத்திய அரசு மறந்தது ஏனோ என்று தெரியவில்லை. 

சிறுவணிகத்தில் அன்னிய முலீட்டை அனுமதிக்கும் பட்சத்தில், விவசாய உற்பத்தி பொருளுக்கு அதிக விலை கிடைக்கும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் பொருள் விற்கப்படும் என்று சொல்லுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்" இருக்கிறது. அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்கி குறைந்த விலைக்கு விற்பதற்கு எந்த முதலீட்டாளர்கள் முன்வருவார்கள் என்று தெரியவில்லை. 

சிறு வணிகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்யவா? இல்லை. இவர்களின் நோக்கம் முதலீடு செய்து இலாபம் ஈட்டுவதே. இவர்கள் எப்படி அதிக விலைக்கு பொருள் வாங்கி குறைந்த விலைக்கு விற்பார்கள். 

சிறு வணிகத்தில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுதான் விவசாய உற்பத்திப் பொருள்களை வாங்குவார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில், பொருள்களின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கில் வைத்துக் கொண்டுதான் விலை நிர்ணயித்து வாங்குவார்களே தவிர, விவசாயிகள் என்ன விளைவித்து கொடுக்கிறார்களோ அதை அந்த நிலையிலேயே வாங்க எந்த கார்ப்ரேட் நிறுவனமும் முன் வராது. தரம் பிரித்துதான் வாங்குவார்கள். இந்த நிலை விவசாயிகளை அதிக பாதிப்புக்குள்ளாக்கும்.

 முதலீடு செய்யும் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு முன்பணம் என்கிற பெயரில் கடன் கொடுத்து அவர்களது உற்பத்தியை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொள்ளும். ஆரம்பத்தில் இனிக்கும் இந்தச் சலுகை விரைவிலேயே விவசாயிகளின் கழுத்தில் விழும் சுருக்காக மாறி விலை நிர்ணயம் பெரு நிறுவனங்களின் தனி உரிமையாக மாறிவிடும்.

உண்மையில் விலைவாசி குறையுமா? 

விலைவாசி குறையும் என்ற கூற்று எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. விலைவாசி உயர்வதற்கு இடைத்தரகர்கள்தான் காரணம். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கும் போது இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள். நிறுவனங்களே பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வாதம் எப்படி இருக்கிறது என்றால் உணவுப்பொருள் விலைவாசி உயர்வுக்கு காரணம் எல்லாம் இடைத்தரகர்கள் தான் என்று கூறுவது படிக்கத் தெரியாதவன் ஏட்டை குறை சொன்னானாம்" என்பது போல் உள்ளது. 

உண்மையில் விலைவாசி உயர்வுக்கு இதுவா காரணம்?

முறைப்படுத்தப்படாமல் உள்ள சில்லறை வர்த்தகம், உணவு தானியத்தை இணையதள வர்த்தகத்தில் ஈடுபடுத்தியது, கட்டுபடுத்தவியலாத பங்குசந்தை சூதாட்டம். இவைதான் முக்கிய காரணம். இந்த குறைகளை களைவதற்கு அரசு இதுவரையில் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. மாற்றாக, இவற்றை மேன்மேலும் உரமிட்டு வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் நிலைப்பாடு.

 2013 விளையபோகும் ஒரு பொருளுக்கு 2012 ல் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுதான் அன்னிய நிறுவனங்கள் வாங்குவார்கள். இப்படி இன்னும் விளையாத ஒரு பொருளுக்கான ஒப்பந்த பத்திரத்தை பங்கு சந்தையில் ஏலம் விடுவார்கள். அப்போது அந்த பொருளின் மதிப்பு, சந்தை மதிப்பை விட பல மடங்கு உயர்ந்து போகும். ஆனால் இந்த நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்த விலைக்கே பொருள்களை கொள்முதல் செய்வார்கள். இந்த நிலை விளைவித்த விவசாயிகளுக்கு விளைபொருள்களின் மேல் உரிமை இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடும். இதனால்தான் உணவுப் பொருள் விலை அதிகரிக்குமே தவிர, இடைத்தரகர்களால் தான் என்று கூறுவது சரியல்ல.

 இது போன்ற பல்வேறு வழிகளில் விவசாயத்தை திட்டமிட்டு அழித்து விட்டு அதன் வினியோக வலைப் பின்னலை பன்னாட்டு கம்பெனிகளிடம் கொடுத்து விடுவதன் மூலம் விலை குறையும் என்று சொல்லுவதும், விவசாய விளைபொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டத்தை தடை செய்யாமல் விலை வாசி உயர்வையும் கட்டுபடுத்த முடியாது. விவசாயத்தையும் வாழ வைக்க முடியாது.

 அரசு செய்ய வேண்டியது.

இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள்(22320000000000) ஆக 2012 இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 

இந்த அளவு வர்த்தகம் நடக்கும் சில்லறை வணிககத்தில் வெறும் 3 % மட்டுமே முரைபடுத்தப்பட்ட வர்த்தகமாக நடைபெறுகிறது, 97 சதவீதம் சரியாக முறைப்படுத்தப்படமால் உள்ளது. மிகப்பெரிய பணபுழக்கம் உள்ள ஒரு வணிக அமைப்பை முறைபடுத்தாமல் இருக்கும் பச்சத்தில் அன்னிய முதலீடுகளை அதில் அனுமதிப்ப என்பது சரியானது அல்ல. ஆகவே முதலில் இந்த சிள்ளறை வர்த்தகத்தை முதலில் முறை படுத்த வேண்டும்.

 விவசாய உற்பத்தி பொருள்களை பாதுகாத்து வைப்பதற்கு வட்டம் அல்லது மாவட்டடம் தோரும் சோமிப்பு கிடங்குகள் அமைத்து அதை முறையாக பாரமரிக்க வேண்டும். 

கிராமங்கள் தோரும் விளைவிக்கப்ப படுகின்ற விவசாய பொருட்களை அந்த அந்த காலகட்டத்தில் முறையாக கணக்கிட்டு, அதன் அடிப்படையிலும், விவசாய இடுபொருள்களின் விலையின் அடிப்படையிலும், மற்றும் உற்பத்தி செய்கின்ற செலவினங்களையும் கணக்கீட்டு அதன் அடிப்படையிலும் அரசே கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை இரண்டையும் நிர்னயிக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை: